தளபதி விஜய் அவர்களின் 49 வது பிறந்தநாள் இன்று.
இந்த மூஞ்சியெல்லாம் யார் காசு கொடுத்த பாப்பாங்க என்று விமர்சனத்தில் தொடங்கி இந்த முகத்தை காண தவம் கிடைக்கும் ரசிகர்கள் என்றவாறு பல ரைட்டப்புகளை நாம் பார்த்துவிட்டோம்.

இளைய தளபதியே தற்போது தளபதியாக அப்டேட் ஆகிவிட்டார். எனவே நாமும் கொஞ்சம் அப்டேட் ஆக சொல்லுவோம்.
சமீபத்தில் நடந்து முடிந்த மாணவர்கள் சந்திப்பில் ஏராளமான கியூட் மொமெண்ட்டுகளை எல்லாரும் ரசித்தோம். கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்கு மேல் நடந்த அந்த நிகழ்ச்சியில் சற்றும் உற்சாகம் குறையாமல் ஆர்மபித்தால் துளிர்த்த அதே புன்னகையை இறுதி வரை மலரச் செய்து மக்கள் மனதில் இடம் பிடித்தார் தளபதி விஜய்.
விஜய் திரைத்துறையில் 39 வருடங்களாக கோலாச்சி வருகிறார்.
தனது 10 வயதிலிருந்தே திரைத்துறை வாழ்க்கையைத் தொடங்கிய விஜய் 1984 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த வெற்றி எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து அப்பா எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய நான் சிகப்பு மனிதன், வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு, இது எங்கள் நீதி உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.
அதன் பின் 1992 ஆம் ஆண்டு எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய ‘நாளைய தீர்ப்பு’ எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து விஜயகாந்துடன் இணைந்து செந்தூரப்பாண்டி படத்தில் நடித்தார்.
1994 இல் இவர் நடித்த ரசிகன் திரைப்படம் இவருக்கு இளைய தளபதி என்ற பெயரை பெற்று தந்தது.
1996 இல் பூவே உனக்காக எனும் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இப்படம் வெற்றி படமாக அமைந்தது மட்டுமல்லாமல் விஜய்க்கு ஒரு திருப்புமுனையாகவும் அமைந்தது.
பின் ராஜாவின் பார்வையிலே படத்தில் அஜித்துடனும், ஒன்ஸ்மோர் படத்தில் சிவாஜி கணேசனனுடனும், நேருக்கு நேர் படத்தில் சூர்யாவுடனும் இணைந்து நடித்திருந்தார்.இவர் செல்வா, லவ் டுடே, காதலுக்கு மரியாதை, கோயம்புத்தூர் மாப்பிள்ளை, பிரியமுடன், நினைத்தேன் வந்தாய், நிலவே வா உள்ளிட்ட பல படங்களில் தன் நடிப்பு திறமையை வெளிக்காட்டி இருந்தார்.மேலும் காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் நடித்ததற்காக விஜய்க்கு சிறந்த நடிகருக்கான மாநில திரைப்பட விருது கிடைத்தது.
அதுமட்டுமில்லாமல் 1998 ஆம் ஆண்டு, திரைத்துறையில் நுழைந்த 6 வருடங்களில் கலைமாமணி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பின் கண்ணுக்குள் நிலவு, பிரியமானவளே, பிரண்ட்ஸ், மின்சார கண்ணா, போக்கிரி திருப்பாச்சி, கில்லி, சச்சின், சிவகாசி, அழகிய தமிழ் மகன் உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை கொடுத்தார்.
இருந்தபோதிலும் வில்லு, சுறா, வேட்டைக்காரன் முதலிய திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றியடையவில்லை.
பின் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த காவலன் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் தனக்கான அடையாளத்தை மீண்டும் நிலை நாட்டினார்.அதைத் தொடர்ந்து நண்பன்,துப்பாக்கி, ஜில்லா, கத்தி, தெறி மெர்சல், பீஸ்ட், மாஸ்டர், வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்து மாஸ் காட்டி இருந்தார்.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 67 ஆவது படமான லியோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இவ்வாறு இளைய தளபதியிலிருந்து, தளபதியாக உருவெடுத்துள்ள விஜய் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் கொண்டாடும் வண்ணம் திரைத் துறையில் சாதனை படைத்துள்ளார்.
மேலும் விஜய், தமிழ் சினிமாவில் 35 பாடல்களுக்கு மேல் பாடி தான் சிறந்த நடிகர் மட்டும் இல்லாமல் சிறந்த பாடகர் என்பதையும் நிரூபித்துள்ளார். 1994 இல் ‘பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி’ என்ற பாடலில் தொடங்கி, தொட்டபெட்டா ரோட்டு மேல, தங்க நிறத்துக்கு, கூகுள் கூகுள், கண்டாங்கி கண்டாங்கி, வெறித்தனம் உள்ளிட்ட பல பாடல்களை இவர் பாடியுள்ளார். இவர் பாடிய பெரும்பாலான பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் இவர் பாடிய ‘ரஞ்சிதமே’ பாடல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ளது. மேலும் தற்போது இவர் நடித்துக் கொண்டிருக்கும் லியோ படத்தில் ‘நான் ரெடி’ என்ற பாடலையும் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டான்ஸ் என்றாலே தமிழ் ரசிகர்களின் மனதில் இருக்கும் ஒரே பெயர் விஜய் தான். விஜய்யின் எனெர்ஜியை இப்போதைய இளம் நடிகர்கள் கூட ஈடு செய்ய முடியாது. அந்தளவுக்கு புயலாக நடனம் ஆடுவதில் வல்லவர் விஜய்.
சலிக்காத நடனத்திற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
அந்த வகையில் ஒவ்வொரு படங்களிலும் ஒவ்வொரு விதமான நடன அசைவுகளை வெளிப்படுத்தி வருகிறார். இதன் மூலம் விஜய்க்கு வயது ஏறினாலும் அவர் இளைய தளபதி மட்டுமல்லாமல் என்றும் இளமை தளபதி என்பதை உறுதி செய்கிறார்.
இதற்கிடையில் இவர் விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் ரத்த தானம் செய்வது, உலக பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்குவது, உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களையும் செய்து வருகிறார். சமீபத்தில் இவர் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய செயல் பலராலும் பாராட்டப்பட்டது. இதனால் இவர் அரசியலில் கால் பதிக்க தொடங்கி விட்டார் என்று ரசிகர்கள் பலரும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
இவ்வாறு திரைத்துறையில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் தான் ஹீரோ என்பதை நிரூபித்து வரும் நம் இளைய தளபதி என்றும் இளமையான தளபதி யாக பல்லாண்டு காலம் வாழ, நாமும் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து மகிழ்வோம்.


