நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நிலையில் தற்போது தனது 68வது படமான தி கோட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் 2024 செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. அதை தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் தனது 69 ஆவது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் தொடர்பான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இதற்கிடையில் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி தனது அரசியல் பிரவேசத்தை தொடங்கியுள்ளார். அதன்படி 2026 சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிட இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் இன்று 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை சந்தித்து ஊக்கத்தொகை வழங்குகிறார் விஜய். கடந்த ஆண்டு ஒரு நடிகராக மட்டுமே மாணவர்களை சந்தித்த விஜய் மாணவர்களுக்கு காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போடாதீர்கள் போன்ற பல நல்ல அறிவுரைகளை வழங்கினார்.
அதேசமயம் விஜய்யின் இந்த செயல் பலராலும் பாராட்டப்பட்டது. எனவே விஜய் இந்த ஆண்டு அரசியல்வாதியாக, தவெக தலைவராக மாணவர்களை சந்திக்க உள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அரசியல் கட்சி தலைவராக விஜய் என்ன பேசுவார் என்பது போன்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அனேகமாக இன்று விஜய் பேசும் அந்த பேச்சு தான் இன்று முழுவதும் பிரேக்கிங் நியூஸாக இருக்கும் என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இன்று (ஜூன் 28) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் மாணவர்களை சந்திக்கும் இந்த விழா சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இதற்காக விஜய் காலையிலேயே மண்டபத்திற்கு வந்துள்ளார்.
மேலும் இந்த நிகழ்ச்சி இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, அரியலூர், கோயம்புத்தூர், இராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, ஈரோடு, தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, சேலம், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் தொகுதி வாரியாக பங்கேற்கின்றனர். அதன்படி கிட்டத்தட்ட 800க்கும் மேலானோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பட்சத்தில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு வருகை தரும் மாணவியர் மாணவ, மாணவியர்களுக்கு விஜயின் புகைப்படம் பதித்த பை ஒன்றில் தண்ணீர் பாட்டில், ஜூஸ், ஸ்னாக்ஸ் போன்றவை வைத்து அனைவருக்கும் கொடுக்கப்படுகிறது. முதல் ஆளாக விஜய் வருகை தந்திருக்கும் நிலையில் அவரைக் கண்ட ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் விஜயை வரவேற்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.