சென்னை போரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து சுமார் ரூ.1.70 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற இரு பிரபல கொள்ளையர்களை போலீசார் கைது செய்து, திருடப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
போரூர் மங்களா நகர் பகுதியில் உள்ள வீட்டின் முதல் தளத்தில் தனலட்சுமி என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் மருத்துவ சிகிச்சைக்காக குடும்பத்துடன் வெளிநாடு சென்றிருந்ததால் வீடு பூட்டப்பட்ட நிலையில் இருந்தது. அதே வீட்டின் கீழ்தளத்தில் வேறு ஒருவர் வாடகைக்கு வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 11-ஆம் தேதி பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், பீரோவை உடைத்து அதிலிருந்த ரூ.1.70 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். அருகில் கட்டுமானப் பணி நடைபெற்று வந்ததால் ஏற்பட்ட சத்தத்தை பயன்படுத்தி கொள்ளையர்கள் நூதன முறையில் கைவரிசை காட்டிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தனலட்சுமி சார்பில் போரூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அசோக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பிரபல கொள்ளையர்களான செல்வா மற்றும் சிவா என்பது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 1 கிலோ 700 கிராம் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட இருவர்மீதும் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
