நிலக்கோட்டை அருகே சிறுமியை சீரழித்த சட்டக் கல்லூரி மாணவர் போக்சோவில் கைது
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சட்டக் கல்லூரி மாணவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். ராமராஜபுரம் அருகே ஆர்.மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் சங்கீத சரவணன்(24) ஆந்திர மாநில சட்ட கல்லூரியில் மூன்றாம் ஆண்டு சட்டம் படித்து வருகிறார்.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை சங்கீத சரவணன் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததை வீடியோவாக பதிவு செய்த சங்கீத சரவணன் அந்த வீடியோவை காட்டி மிரட்டி சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
இதனை அடுத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி விளாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து புகாரைப் பெற்றுக் கொண்ட விளாம்பட்டி காவல்துறையினர் சங்கீதசரவணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தன்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிந்த சட்டக்கல்லூரி மாணவன் தலைமறைவானார். இதனைத் தொடர்ந்து தனிப்படை அமைத்து தேடி வந்த போலீசார் வத்தலகுண்டில் பதுங்கி இருந்த சங்கீத சரவணன் மடக்கிபிடித்து கைது செய்தனர்.
இதனை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் சட்டக் கல்லூரி மாணவன் சங்கீத சரவணனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.