தீபாவளி பண்டிகையின் போது, பைக்கின் முகப்பில் பட்டாசுகளை கட்டி வெடித்தபடி, வீலிங் செய்து சாகசத்தில் ஈடுபட்ட நான்கு இளைஞர்களை பெருந்துறை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 20 ஆம் தேதி தீபாவளி பண்டிகையின் போது இளைஞர்கள் சிலர் இரவு நேரத்தில், தங்களது இருசக்கர வாகனத்தின் முகப்பில் ராக்கெட் வகை பட்டாசுகளை வைத்து வெடித்தபடி வீலிங் செய்தனர். இந்த இளைஞா்களின் செயல், தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் இருந்தது. மேலும் இந்த காட்சிகளை செல்போனில் படம் பிடித்து இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவேற்றம் செய்திருந்தனர். இந்த காட்சிகள் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இந்த சாகசத்தில் ஈடுபட்ட நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த ஆகாஷ்(20), ஈரோடு பெரிய சடையம்பாளையத்தை சேர்ந்த சஞ்சய்(22), ஈரோடு காசி பாளையத்தை சேர்ந்த பிரவீன்(21), ஈரோடு வீரப்பன் பாளையத்தை சேர்ந்த கவின்(23) ஆகிய நான்கு பேரை போலீசாா் கைது செய்தனர். இவர்கள் வீலிங் செய்த மூன்று வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைதான நான்கு பேரில் மூன்று பேர் கல்லூரி மாணவர்கள் என்றும் ஒருவர் தனியார் நிறுவன ஊழியர் என்றும் போலீசார் தெரிவித்தனர். ஏற்கெனவே கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வீலிங் செய்தபடி பல்வேறு சாகச காட்சிகளை இந்த இளைஞா்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.



