மாணவி 10-ம் வகுப்பு படிக்கும் போது பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோவில் ஏற்கனவே கைதாகி பிணையில் வந்தவர் மீண்டும் மாணவியை வழிமறித்து கையைப் பிடித்து காதலிக்குமாறு வற்புறுத்திய 52 வயது நபர் கைது

சென்னை சூளைமேடு பகுதியில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் தன் தாய் தந்தையுடன் வசித்து வருகின்றார். தனியார் பள்ளியில் +2 பிடித்து வரும் அந்த பெண் நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
சூளைமேடு எம்.எம்.டி.ஏ பேருந்து நிலையம் அருகே நடந்துச் சென்று கொண்டிருந்த போது ஆண் நபர் ஒருவர் +2 மாணவியை வழிமறித்து கையைப் பிடித்து இழுத்து தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.
அதற்கு மாணவி எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டதால் அங்கிருந்த பொதுமக்கள் ஓடிவந்து அந்த நபரை பிடித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சூளைமேடு போலீஸார் சம்பவயிடத்திற்கு விரைந்துச் சென்று மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் போலீஸார் பாதிக்கப்பட்டவர் பள்ளி மாணவி என்பதால் இந்த வழக்கை அண்ணாநகர் மகளிர் அனைத்து காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்தனர். இதனை அடுத்து மகளிர் போலீசார் மாணவி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கைது செய்யப்பட்ட நபர் சூளைமேடு பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜன் (52) என்பதும் இவர் கொரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.
மேலும், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் சுந்தர்ராஜன் வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்ததும் அப்போது சுந்தர்ராஜன் சிறுமியை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்ததால் சிறுமியின் பெற்றோர் வீட்டை காலி செய்து விட்டு வேறோரு வீட்டிற்கு சென்றது விசாரணையில் தெரியவந்தது. அதுமட்டுமின்றி சிறுமி வேறு வீட்டிற்கு சென்ற நிலையில் சுந்தர்ராஜன் தொடர்ந்து அவரை பின்தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் சிறுமி பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது சுந்தர்ராஜன் அவரை பின்தொடர்ந்து சென்று கையைப் பிடித்து இழுத்து காதலிக்க வற்புறுத்தி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும், அப்போது சிறுமி அளித்தப் புகாரில் அரும்பாக்கம் போலீஸார் போக்சோ வழக்கில் சுந்தர்ராஜனை கைது செய்து சிறையில் அடைத்ததது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த சுந்தர்ராஜன் நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த சிறுமியை வழிமறித்து கையைப் பிடித்து இழுத்து காதலிக்க வற்புறுத்தி தொந்தரவு செய்ததையடுத்து கைது செய்யப்பட்ட சுந்தரராஜனிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.