மது குடிக்க பணம் கேட்டு அடித்து துன்புறுத்திய மகனை தாயும் மருமகளும் இணைந்து தோசையில் பூச்சி கலந்து கொடுத்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகேயுள்ள குமளம் சீனிவாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த கார் ஓட்டுனரான விஸ்வலிங்கம் (29) இவர் கடந்த 17-ந்தேதி மாலை அவரது வீட்டிலேயே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவருடைய மார்பு, கழுத்து, கன்னம், தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் ரத்தக்காயங்கள் இருந்தன. இதுகுறித்த தகவலின்பேரில் வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்ததில் விஸ்வலிங்கத்தை யாரோ அடித்துக்கொலை செய்திருப்பதை உறுதி செய்தனர். மேலும் விசாரணையில், திருக்கோவிலூர் அருகே மேலத்தாழனூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வி (25) என்பவரை விஸ்வலிங்கம் திருமணம் செய்துகொள்ளாமலே அவரை தனது வீட்டில் தங்கவைத்து கணவன்- மனைவிபோல் குடும்பம் நடத்தி வந்ததும், விஸ்வலிங்கம் கொலை செய்யப்பட்டதற்கு பிறகு செல்வி அங்கு இல்லாததும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதன் அடிப்படையில் விஸ்வலிங்கத்தை செல்வி கொலை செய்திருக்கக்கூடும் என்ற கோணத்தில் விசாரணையை செய்த போலீசார் திருக்கோவிலூர் பகுதியிலிருந்த செல்வியை அழைத்து வந்து காவல் நிலையத்தில் விசாரணை செய்தனர்.
போலீசாரின் விசாரணையில் செல்வியை விஸ்வலிங்கம் திருமணம் செய்து கொள்ளாமல் தனது வீட்டிற்கு அழைத்துச்சென்று ஒன்னரை வருடங்களுக்கு மேலாக கணவன் மனைவிபோல் குடும்பம் நடத்தி வந்துள்ளார். அப்பொழுது விஸ்வலிங்கத்திற்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதால் அடிக்கடி மது குடித்துவிட்டு செல்வியிடமும், தனது தாய் முனியம்மாளிடமும் (64) அவ்வப்போது மது குடிக்க பணம் தரும்படி இருவரையும் தகாத வார்த்தையால் திட்டி அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
விஸ்வலிங்கத்தின் தொந்தரவை தாங்கிக்கொள்ள முடியாமல் துன்பப்பட்ட செல்வி, விஸ்வலிங்கத்தை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார். அதற்கு, தனது மகன் என்று கூட பாராமல் முனியம்மாளும் ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டுக்கு வந்த விஸ்வலிங்கம், தனது தாய் முனியம்மாள் மற்றும் செல்வி ஆகிய இருவரிடமும் தகராறு செய்து அடித்து துன்புறுத்தியதால் ஆத்திரமடைந்த இருவரும் வீட்டில், வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து தோசை மாவில் கலந்து தோசை சுட்டு விஸ்வலிங்கத்துக்கு கொடுத்துள்ளனர். போதையில் இருந்த அவரும் விஷம் கலந்திருப்பது தெரியாமல் அந்த தோசையை சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவர் வாயில் நுரைத்தள்ளி இறந்துள்ளார்.
அதன் பிறகு இந்த கொலையை மறைக்க செல்வி, முனியம்மாள் ஆகிய இருவரும் திட்டம் போட்டு இறந்ததற்கு பிறகு அவரது உடலில் மார்பு, கழுத்து, கன்னம், தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் கத்தியால் கிழித்து யாரோ கொலை செய்தது போன்று நாடகம் ஆடியதாக போலீசார் விசாரனையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து செல்வி, முனியம்மாள் ஆகிய இருவரையும் வளவனூர் போலீசார் கைது செய்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஏழு ஆண்களை ஏமாற்றிய பெண்ணின் பெற்றோரை கடத்திச் சென்ற முதல் கணவன் கைது