திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே சட்டவிரோதமாக நடந்த ஆட்டோ பந்தயத்தில் விபத்து ஏற்பட்டு இரண்டு பேர் உயிரிழந்தனர்.
சென்னை புறநகரில் வண்டலூர் முதல் மீஞ்சூர் வரை உள்ள வெளிவட்ட சாலையில் எட்டுக்கும் மேற்பட்ட ஆட்டோக்களை கொண்டு சட்ட விரோதமாக பந்தயம் நடைபெற்றது. செங்குன்றம் அருகே ஆட்டோக்கள் சீறிப்பாய்ந்து சென்றபோது இரண்டு ஆட்டோக்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

அப்போது பந்தயத்திற்கு பாதுகாப்பாக வந்த இருசக்கர வாகனமும் வேடிக்கை பார்க்க வந்த மற்றொரு இருசக்கர வாகனமும் விபத்தில் சிக்கியது. இதில் பைக்கில் வந்த இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில் செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 15ஆம் தேதி வண்டலூர் மெயின் ரோடு சாலையில் அடுத்தடுத்து மூன்று இரு சக்கர வாகனங்கள் மோதி குன்றத்தூரை சேர்ந்த மணி, அம்பத்தூரை சேர்ந்த சாம் மற்றும் சுந்தர் உயிரிழந்ததாகவும் மூன்று பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியானது. அதற்கு ஆட்டோ பந்தயத்தில் ஏற்பட்ட விபத்து தான் காரணம் என தற்போது தெரியவந்துள்ளது


