Homeசெய்திகள்க்ரைம்ஆந்திராவில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி சேரா! அதிரடியாக கைதுசெய்த தனிப்படை போலீசார்! 

ஆந்திராவில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி சேரா! அதிரடியாக கைதுசெய்த தனிப்படை போலீசார்! 

-

- Advertisement -

24 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வடசென்னையின் பிரபல ரவுடியை ஆந்திராவில் வைத்து தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சென்னை வியாசர்பாடி பிவி காலனியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் என்ற சேரா. வடசென்னையின் பிரபல ரவுடியான இவர், ஏ பிளஸ் கேட்டகிரி ரவுடி ஆவார். இவர் மீது 2 கொலை வழக்குகள் உள்பட 15 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. கொடுங்கையூர், எம்.கே.பி. நகர், ஆர்.கே.நகர், வடக்கு கடற்கரை காவல் நிலையம், மாதவரம், செம்பியம் ஆகிய காவல் நிலையங்களில் சேரா மீது குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில், கடந்த 2001ஆம் ஆண்டு முதல் ரவுடி சேரா தலைமறைவாகி விட்டார். போலீசார் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், 24 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த ரவுடி சேராவை கைதுசெய்ய புளியந்தோப்பு காவல் துணை ஆணையர் முத்துகுமார் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் ரவுடி சேரா ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே பதுங்கியிருந்த ரவுடி சேராவை  அதிரடியாக கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ரவுடி சேராவை தனிப்படை போலீசார் சென்னை அழைத்துவந்து விசாரணை நடத்தி வருகின்றனர். எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட ரவுடி சேரா மீது ஆயுத தடைச் சட்டம், போதைப் பொருள் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரவுடி சேராவின் கூட்டாளிகள் ஒவ்வொருவராக சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் தற்போது சேரா கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஆந்திராவில் கடந்த 5 வருடங்களாக தனது குடும்பத்துடன் வசித்து வந்ததும், அங்கு இருந்தபடியே கஞ்சா விற்பனை மற்றும் வசதி படைத்தவர்களை மிரட்டி பணம் பறிப்பது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டு வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதனை அடுத்து சேரா மீது எம்.கே.பி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

MUST READ