குடிபோதையில் மகன் தாக்கியதில் தந்தை பலி
திருக்கழுக்குன்றத்தில் குடிபோதையில் மகன் தாக்கியதில் தந்தை பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பரமசிவம் நகர் பகுதியை சேர்ந்தவர் கேசவன் (55), இவருக்கும் இவரது மகன் மணிகண்டனுக்கும் (31), அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். அதேப்போல் நேற்று இரவும், இருவருக்கு மிடையே மது போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில், ஒரு கட்டத்தில் மணிகண்டன், தந்தை கேசவனை அடித்து கீழே தள்ளியுள்ளான். மயக்க நிலையில் இருந்த கேசவனை அங்கிருந்தவர்கள் திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனைத்து கொண்டு சென்றனர்.
அங்கு கேசவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர், ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த திருக்கழுக்குன்றம் போலீசார் இறந்துப் போன கேசவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தந்தையை அடித்து கொலை செய்த மகன் மணிகண்டன் தலைமறைவாகியிருந்த நிலையில் இன்று அதிகாலை மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மகன் தந்தையை அடித்துக் கொலை செய்த சம்பவம் திருக்கழுக்குன்றம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.