சென்னையின் இராயப்பேட்டையில், வெளிநாட்டில் வசித்து வந்த பெண்ணின் வீடு மற்றும் கடைகளை அபகரித்து, பிறரிடம் வாடகைக்கு விட்டு, ரூ.27 லட்சம் மோசடி செய்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெருங்குடியில் வசித்து வரும் சாரா வஹாப் (34) என்பவருக்கு, இராயப்பேட்டை கௌடியா மட் சாலையில் வீடு, தரை தளத்தில் 3 கடைகள் மற்றும் மேல்தளங்களில் 4 வீடுகள் உள்ளன. 2018-ம் ஆண்டு அவர் தனது பெற்றோருடன் சவுதி அரேபியாவிற்கு சென்றபோது, தரை தளத்தில் புல்லா ராவ் என்ற நபர் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்தார். மற்ற கடைகள் மற்றும் வீடுகள் பூட்டியிருந்தன.

கொரோனா காலம் காரணமாக தாயகம் திரும்ப முடியாமல் இருந்த சாரா வஹாப், 2022-ம் ஆண்டு சென்னை வந்தபோது, புல்லா ராவ் உயிரிழந்துவிட்டார் என்றும், அவரது மகன் அசோக் அந்த ஸ்டுடியோவை நடத்தி வந்தார் என்றும் தெரிந்தது. இதற்கிடையில், அசோக் பூட்டியிருந்த வீடுகள் மற்றும் கடைகளின் பூட்டை உடைத்து, போலி ஆவணங்கள் தயாரித்து தன்னை வீட்டின் உரிமையாளர் எனக் கூறி, பிறரிடம் முன்பணம் பெற்று வாடகைக்கு விட்டுள்ளாா். இவ்வாறு அவர் 27 இலட்சம் ரூபாய் பெற்றதாக புகார் கூறப்பட்டது. மேலும், இதுகுறித்து சாரா வஹாப் விளக்கம் கேட்டபோது, அசோக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சாரா வஹாப் அளித்த புகாரின் பேரில் இராயப்பேட்டை E-2 காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குற்றச்சாட்டு உண்மை எனத் தெரியவந்தது. இதனையடுத்து, திருவல்லிக்கேணி சுதந்திரா நகர் 4வது தெருவை சேர்ந்த அசோக் (34) கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போலீசார், நீதிமன்ற உத்தரவுப்படி அசோக் சிறையில் அடைக்கப்பட்டாா்.
சொதப்பிய தவெக மாநாடு! விஜய்க்கு பிரேமலதா எச்சரிக்கை! ஆதவ் ஏற்படுத்திய டேமேஜ்!