புரோக்கராக செயல்பட்ட கணவன் – நூதன மோசடி
புரோக்கராக செயல்பட்ட கணவன் தாராபுரம் வாலிபரை ஏமாற்றி திருமணம் செய்த கேரளா பெண் நகை-பணத்துடன் தப்பி ஓட்டம். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (29) காற்றாலை நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் அவருக்கு மதுப்பழக்கம் இருந்ததால் அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார்.
இதை அடுத்து அவருக்கு மறுமணம் செய்ய பெண் பார்த்து வந்தனர்.
அப்போது கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை பகுதியைச் சேர்ந்த திருமண புரோக்கர் ஒருவர் ராதாகிருஷ்ணனை அணுகினார். அவர் கேரளாவை சேர்ந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தை காண்பித்துள்ளார். அந்த பெண் ராதாகிருஷ்ணனுக்கு பிடிக்கவே திருமணம் நிச்சயக்கப்பட்டது.
இதனிடையே பெண்ணின் வீட்டில் வசதி இல்லாததால் ஏதாவது உதவி செய்யுமாறு புரோக்கர் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து ராதாகிருஷ்ணன் வீட்டினர் அந்தப் பெண்ணுக்கு 1.1/2 பவுன் தங்க நகை போட்டுள்ளனர். மேலும் புரோக்கருக்கு ரூபாய் 80,000 கொடுத்துள்ளனர்.
இதை அடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ராதா கிருஷ்ணனுக்கும் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கும் உடுமலை திருமூர்த்தி மலை அமன லிங்கேஸ்வரர் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது.பின்னர் அவர்கள் தாராபுரத்திற்கு வந்தனர்.
அங்கு முதலிரவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அப்போது கேரளா பெண் ராதாகிருஷ்ணனிடம் தனக்கு மாதவிடாய் எனவே மற்றொரு நாள் முதலிரவு வைத்துக் கொள்ளவும் என்று கூறியுள்ளார். அதனை நம்பிய இராதாகிருஷ்ணனும் சம்மதம் தெரிவித்தார். மறுநாள் தனது தாய்க்கும் உடல்நிலை சரியில்லை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரைப் பார்க்க சொல்ல வேண்டும் என்று தெரிவிக்கவே ராதாகிருஷ்ணன் தாலி கட்டிய மனைவியை பொள்ளாச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பொள்ளாச்சிக்கு சென்றதும் கேரளா பெண் திடீரென மாயமாகிவிட்டார் நீண்ட நேரம் ஆகியும் அவர் வராததால் சோகத்துடன் தாராபுரத்திற்கு திரும்பிய ராதாகிருஷ்ணன் நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
அப்போது நகை பணத்திற்காக ராதாகிருஷ்ணனை ஏமாற்றிய கேரளா பெண் திருமணம் செய்து இருப்பது தெரியவந்தது. மேலும் அந்தப் பெண்ணின் கணவர் தான் திருமண புரோக்கர் என்பதும் தெரிய வந்தது. இதே போல் திருமணமாகாத வாலிபர்களிடம் பணம் நகை பறிப்பதற்காக அந்த புரோக்கர் தனது மனைவியையே வாலிபர்களுக்கு திருமணம் செய்து வைத்து நூதனத் திருமண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அந்தப் பெண்ணுக்கு ஒரு குழந்தையும் உள்ளது இருப்பினும் அவர்கள் பணத்திற்காக இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சிக்காமல் இருக்க தங்களது பெயரை மாற்றி கொடுத்து ஏமாற்றி உள்ளனர்.
இதனை அடுத்து திருமண புரோக்கரையும் அவரது மனைவியையும் போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் பிடிபட்டால் இது போன்று அவர்கள் யார் யாரை எல்லாம் ஏமாற்றி பணம்-நகை பறித்துள்ளனர் என்று விவரம் தெரியவரும். இந்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.