தெலுங்கானாவை சேர்ந்த பழைய கார்கள் விற்பனையாளர் வளசரவாக்கத்தில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தெலுங்கானா, மாநிலத்தை சேர்ந்தவர் ரவீந்திர கவுடா(57) பழைய கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். ரூ7 கோடி வரை ஏற்பட்ட தொழில் நஷ்டத்தால் கடனில் சிக்கி தவித்து வந்த நிலையில், கடன் கொடுத்தவர்களும் நெருக்கடி கொடுக்க தொடங்கியதால் ரவீந்திர கவுடா தெலுங்கானாவில் வீட்டை காலி செய்துவிட்டு கடந்த ஏழாம் தேதி சென்னை வளசரவாக்கம் அடுத்த அன்பு நகர் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் குடும்பத்துடன் குடியேறினார்.
இந்த நிலையில் நேற்று நண்பகல் வீட்டு வாசலில் நின்று மோட்டார் சைக்கிளை துடைத்துக் கொண்டிருந்த ரவீந்திர கவுடாவை மர்ம கும்பல் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றனர். அந்த பகுதியில் நின்றவர்கள் ஏதோ சினிமா சூட்டிங் தான் நடக்கிறது என நினைத்துள்ளனர். சிறிது நேரம் கழித்து தான் உண்மையாகவே கடத்தல் சம்பவம் நடந்தது தெரியவந்தது.

தந்தை ரவீந்திர கவுடா கடத்தப்பட்டது குறித்து அவரது மகள் கோயம்பேடு போலீசில் புகார் அளித்தார். நம்பர் பிளேட் இல்லாத காரில் வந்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கிய நிலையில் ஆந்திர மாநிலம் ஓங்கோல் அருகே கடத்தல் கும்பலை கோயம்பேடு இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து ரவீந்திர கவுடாவை மீட்டனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட ஹைதராபாத் பகுதியை சேர்ந்த மூர்த்தி பாபு மற்றும் அவரது கூட்டாளிகள் உள்ளிட்ட 6 பேர் கும்பலை கைது செய்தனர். கடத்தப்பட்ட ரவீந்திர கவுடா மற்றும் கடத்தல் கும்பலை சேர்ந்த ஆறு பேர் என ஏழு பேரை போலீசாா் சென்னை அழைத்து வந்தனா்.


