இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நகை வியாபாரியான பாலசுப்பிரமணியன் என்பவர் சென்னையில் நகைகளை மொத்தமாக வாங்கி ராமநாதபுரம், பரமக்குடி பகுதிகளில் உள்ள நகைக்கடைகளில் ஆர்டர் எடுத்து விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை 23.11.2024 ஆம் தேதி பாலசுப்ரமணியன் 1 கோடியே 56 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ நகையை (2117 கிராம்) சென்னையில் இருந்து மதுரைக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கொண்டு வந்ததாக கூறப்படுகின்றது.
அப்போது ரயில் நிலையம் நுழைவாயில் முன்பு காரில் வந்த அடையாளம் தெரியாத சிலர் பாலசுப்ரமணியனை கடத்தி அழகர்கோவில் சாலையில் உள்ள கிடாரிப்பட்டிக்கு அழைத்துச் சென்று கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த நகையை பறித்து இறக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பாக பாலசுப்ரமணியன் மதுரை திலகர் திடல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றவாளிகளை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்த நிலையில் கொள்ளையில் ஈடுபட்டது சென்னை மற்றும் மதுரையை சேர்ந்த 5 பேர் என தெரியவந்தது.
தொடர் விசாரணையில் சென்னை பம்மலை சேர்ந்த நாகேந்திரன் என்பவர் ஊர்க்காவல் படையில் பணியாற்றி பல்வேறு குற்றச்சாட்டின் அடிப்படையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு தற்போது சவுகார்பேட்டையில் நகை புரோக்கராக பணியாற்றி வந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக சென்னையில் நகை வாங்கி சென்று பாலசுப்ரமணியனை கண்காணித்து வந்ததாக கூறப்படுகின்றது.
பின்னர் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலை சேர்ந்த செல்லப்பாண்டியன், மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த பாக்கியராஜ், முத்துலிங்கம் நாங்குநேரியை சேர்ந்த முத்துப்பாண்டி ஆகியோருடன் இணைந்து பாலசுப்ரமணியன் கொண்டு வந்த நகையை கொள்ளையடித்தது தெரியவந்தது.
இதனையடுத்து கடந்த திங்கட்கிழமை பாக்கியராஜ், முத்துலிங்கம், முத்துப்பாண்டி ஆகிய மூவரை கைது செய்து அவர்களிடமிருந்து 1.5 கிலோ நகை பறிமுதல் செய்திருந்த நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரான நாகேந்திரன், செல்லபாண்டி ஆகிய இருவரையும் கைது செய்து மீதமுள்ள நகையை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது – சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு