புழலில் வேலை செய்த இடத்தில் 45 கோடி பண மோசடி செய்த விவகாரத்தில் மேலாளர் தூக்கிட்டு தற்கொலை. சடலத்தை கைப்பற்றி காவல்துறை விசாரணை.பிரபல பால் நிறுவனத்தில் மேலாளர் தற்கொலை…காவல் துறை தீவிர விசாரனை.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் நவீன் பொல்லினேனி 38. இவர் கடந்த 3 வருடங்களாக சென்னை ரெட்டேரியில் உள்ள பிரபல தனியார் பால் நிறுவனமான திருமலா பால் நிறுவனத்தில் கருவூல மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். அண்மையில் பால் நிறுவனத்தில் கணக்கு வழக்குகளை சரிபார்த்த போது சுமார் 45 கோடி வரை நவீன் மோசடி செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக பால் நிறுவன அதிகாரிகள் மேலாளர் நவீனிடம் கேட்டபோது அவர் 5 கோடி ரூபாய் பணத்தை திருப்பி அளித்ததாகவும் எஞ்சிய பணத்தை விரைவில் அளித்து விடுவதாக கூறியுள்ளார்.

எனினும் பால் நிறுவன அதிகாரிகள் மோசடி விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர். தொடர்ந்து 45 கோடி கையாடல் செய்த மேலாளரின் மோசடி தொடர்பாக கொளத்தூர் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகார் மாதவரம் குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு விசாரணை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் அவமானத்திற்கு ஆளாக நேரிடும் என மன உளைச்சலில் இருந்த நவீன் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தனது அக்கா மற்றும் பால் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் தகவல் கொடுத்து விட்டு நேற்று இரவு நவீன் சொந்தமாக வாங்கியுள்ள அவரது இடத்தில் உள்ள குடிசையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மின்னஞ்சலை கண்டு அதிர்ச்சி அடைந்த நவீனின் சகோதரி மாதவரம் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளார். மேலும் நவீனின் வீட்டிலும் அலுவலகத்திலும் சென்று தேடியபோதும் இல்லாத நிலையில் அவர் வாங்கிய மனையில் வந்து பார்த்தபோது குடிசையில் தூக்கிட்ட நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து காவல்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த புழல் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் ஆந்திராவை சேர்ந்த நவீன் திருமணம் ஆகாதவர் என்றும், திருமலா பால் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றிய போது 45 கோடி ரூபாய் கையாடல் செய்த புகாரில் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் புழலில் சுமார் 4 கிரவுண்ட் அளவிற்கு சொந்தமாக இடத்தை வாங்கி வைத்துள்ளதும், பல லட்ச ரூபாய் மதிப்பிலான சொகுசு கார்களையும் வாங்கி வைத்துள்ளதும், கார் பிரியர் என்பதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிகாரத்தை நிலைநாட்ட டெல்லி செல்லும் அன்புமணியின் ஆதரவாளர்கள்…