நிலக்கோட்டையில் அடுத்தடுத்து வீடுகளில் பூட்டுகள் உடைக்கப்பட்டு 13 லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகள் கொள்ளை. மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அடுத்தடுத்த வீடுகள் பூட்டுகள் உடைக்கப்பட்டு 13 லட்சம் ரூபாய் பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிலக்கோட்டை பகவதி அம்மன் கோவில் தெரு மற்றும் காளியம்மன் கோவில் தெரு பகுதிகளில் நேற்று நள்ளிரவு புகுந்த மர்ம கும்பல் ஒன்று பூட்டியிருந்த வீடுகளின் கதவை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது.
சத்தம் கேட்டு விழித்துக் கொண்ட பொதுமக்கள் மர்ம நபர்களை விரட்டிய போது அந்த கும்பல் தப்பியோடியது. இதனைத் தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நிலக்கோட்டை காவல்துறையினர் நடத்திய சோதனையில் அப்பகுதியில் உள்ள 5 க்கும் மேற்பட்ட வீடுகளில் பூட்டுகள் உடைக்கப்பட்டு கொள்ளை சம்பவம் அரங்கேறி இருப்பது தெரியவந்தது.
இதில் பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுந்தரம் வயது (65) இவர் தேநீர் கடையில் பலகார மாஸ்டர் பணிபுரிந்து வருகிறார். இவரது நிலத்தை விற்பனை செய்து பீரோவில் வைத்திருந்த ரூபாய் 13 லட்சம் பணம் மற்றும் 2 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் மர்ம நபர்களால் பூட்டுகள் உடைக்கப்பட்ட பெரும்பாலான வீடுகள் காலியான வீடுகள் என்பதால் பெரிய அளவிலான கொள்ளை சம்பவம் நடைபெறவில்லை.
இதன் தொடர்ச்சியாக கொள்ளை சம்பவம் நடந்த பகுதிக்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை நடைபெற்று வருகிறது இச்சம்பவம் தொடர்பாக நிலக்கோட்டை காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.