அம்பத்தூரில் கைகள் கட்டபட்ட நிலையில் மூதாட்டி ஒருவர் அவரது வீட்டிற்குள் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருக்கின்றனர்.
சென்னை அம்பத்தூர் அருகே தனியாக வசித்து வந்த மூதாட்டி ஒருவர் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் கை கட்டப்பட்டு கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஆட்டோவில் வந்த இரண்டு மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அம்பத்தூர் சூரப்பட்டு துலுக்காத்தம்மன் தெரு பகுதியைச் சேர்ந்த பொன்னம்மாள் (70) என்பவருக்கு ஆறு மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வரும் நிலையில், பொன்னம்மாள் தனியாக வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சம்பவத்தன்று ஆட்டோவில் வந்த இரண்டு பேர் பொன்னம்மாள் வீட்டுக்குள் சென்றுள்ளனர். சிறிது நேரத்திற்கு பின்னர் அதே ஆட்டோவில் அவர்கள் வேகமாக வெளியேறியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் சென்றபோது அருகில் விபத்தும் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பொன்னம்மாள் முகம் மற்றும் கண் பகுதியில் காயங்களுடன், கைகள் துணியால் கட்டப்பட்ட நிலையில் மயக்கமடைந்து கிடந்துள்ளார். உடனடியாக உறவினர்கள் 108 ஆம்புலன்ஸை அழைத்தனர். ஆனால் பரிசோதித்த செவிலியர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த புதூர் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்ததுடன், பொன்னம்மாள் அணிந்திருந்த நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், அவரது கைகள் கட்டப்பட்டு கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இதனிடையே, பொன்னம்மாளுக்கு சூரப்பட்டு பேருந்து நிலையம் அருகே ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் இருந்ததாகவும், அந்த நிலத்தை விற்பனை செய்ய சமீபத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு முன்பணம் பெறப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த பணத்தில் ஆறு மகள்களுக்கும் தலா 5 லட்சம் ரூபாய் வழங்கி, மீதமுள்ள தொகையை பொன்னம்மாள் தன்னிடம் வைத்திருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனால், சொத்து மற்றும் பணத்திற்காக இந்த கொலை நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தில் உறவினர்கள் அல்லது வெளிநபர்கள் யாரேனும் தொடர்புடையவர்களா என்பதையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.
காசோலை மோசடி வழக்கில் தலைமறைவான பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பெண் கைது
