spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்பிரபாகரன் - சீமான் சந்திப்பு இவ்வளவு நேரம் தான் நடந்ததா?... மேடையில் போட்டுடைத்த காளியம்மாள்.. பதற்றத்தில்...

பிரபாகரன் – சீமான் சந்திப்பு இவ்வளவு நேரம் தான் நடந்ததா?… மேடையில் போட்டுடைத்த காளியம்மாள்.. பதற்றத்தில் சீமான்!

-

- Advertisement -

பிராபகரனை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் 10 நிமிடங்கள் மட்டுமே சந்தித்து பேசியதாக அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான காளியம்மாள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

seeman

we-r-hiring

பிரபாகரன் பிறந்தநாளையொட்டி சென்னையில் நடைபெற்ற மாவீரர் தின பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அக்கட்யின் முன்னணி நிர்வாகியான காளியம்மாள் கலந்துகொண்டு உரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில் பேசிய காளியம்மாள், திரைப்படம் எடுப்பதற்காக இலங்கை சென்ற சீமான், ஒருவேளை படத்தை மட்டும் எடுத்துவிட்டு வந்திருந்தால் நம்முள் ஒரு தமிழ்தேசிய தலைவராக புகுத்தப்பட்டிருக்க மாட்டார். பிரபாகரனுடனான 10 நிமிட பேச்சு இவ்வளவு பெரிய மாற்றத்துக்கு காரணமாகி, அவரது அரசியலை நிலை பெற செய்வதற்கான மையப்புள்ளியாக இருந்துள்ளது. ஆனால் அவரது கனவு இன்னும் நிலை பெறவில்லை என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நான் படம் எடுக்க இலங்கை செல்லவில்லை. படக்குழுவை பயன்படுத்தி என்னை இலங்கைக்கு அழைத்துச்சென்றனர். திரைப்பட இயக்குநர் என்கிற முறையில் படத்தை தொடங்கிவைத்தேன் அவ்வளவுதான். மற்றவர்கள் நான் பிரபாகரனுடன் நான் 8 நிமிடங்கள் தான் பேசியதாக கூறும் நிலையில், காளியம்மாள் 2 நிமிடங்கள் கூடுதலாக போய்  10 நிமிடங்கள் பேசியதாக கூறியுள்ளார். ஆனால் அன்று என்ன நடந்தது என எனக்கும், பிரபாகரனுக்கும்,  அங்கிருந்த போராளிகளுக்கும் மட்டும் தான் தெரியும். ஆனால் அவற்றை வெளிப்படையாக தெரிவிக்க இயலாது. நான் என்ன செய்ய வேண்டும் என பிரபாகரனிடம் கேட்டபோது அங்கு சென்று இறங்குகள், என்ன செய்ய வேண்டும் என தெரியவரும், அதன்னை செய்யுங்கள் என கூறினார். அதேபோல் இங்கு வந்து பிரபாகரன் காட்டிய வழியில் பயணிக்கிறேன் என பதிலடி கொடுத்துள்ளார்.

இலங்கையில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும், அவருடன் பயணம் மேற்கொண்டு ஆயுதப்பயிற்சி எடுத்துக்கொண்டதாகவும் சீமான் தொடர்ச்சியாக கூறி வந்துள்ளார். மேலும், பிரபாகரனுடன் ஆமைக்கறி சாப்பிட்டது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை சீமான் கட்சியினரிடம் கூறி வந்துள்ளார். இதற்கு பிரபாகரனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த கொளத்தூர் மணி, வைகோ போன்றோர் மறுப்பு தெரிவித்து வந்தனர். எனினும் நாம் தமிழர் கட்சியினரும், தமிழ் தேசிய ஆதரவாளர்களும் சீமானின் பேச்சுகளை ஏற்றுக்கொண்டிருந்தனர். இந்த நிலையில், அவரது கட்சியின் முன்னணி நிர்வாகியான காளியம்மாளே இந்த விமர்சனங்களை உண்மையாக்கும் விதமாக பேசியுள்ளது சீமானை பதற்றம் கொள்ள செய்துள்ளது. அதனால் தான் மேடையிலேயே காளியம்மாளின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து, புதிய விளக்கத்தை அளித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

seeman

இதனிடையே, சீமான் – காளியம்மாள் இடையிலான மோதலின் வெளிப்பாடே, காளியம்மாளின் இந்த பேச்சு என்றும் கருத்து தெரிவிக்கின்றனர். நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகளில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகளான ராஜிவ்காந்தி, வெற்றிக்குமரன், கல்யாண சுந்தரம் போன்றோர் ஏற்கனவே அதில் இருந்து விலகிவிட்டனர். இதனை தொடர்ந்து, சீமானின் வலதுசாரி ஆதரவு நிலைப்பாடு, அருந்ததியர் சமுதாயம் குறித்த கருத்து, ரஜினி உடனான சந்திப்பு என தொடர்ச்சியாக கட்சியினர் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையில் நடைபெற்ற கூட்டத்தில் மோதல் ஏற்பட்ட நிலையில், கட்சியில் இருந்து நிர்வாகிகள் விலகினர். இதேபோல் சேலம், கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி வருகின்றனர்.

அண்மையில் திருவையாறில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பெண் நிர்வாகியான காளியம்மாள், கட்சியில் இருந்து வெளியேறியவர்களை தடுக்க தவறினால், நாமும் கட்சிக்கு துரோகம் செய்வதாக அர்த்தம் என்றும், அவர்கள் களத்தில் இருந்து போராடியவர்கள் அவர்களது கருத்துக்களை கேட்க வேண்டும் என கூறியிருந்தார். மேலும், பிரபாகரனை சுட்டிக்காட்டி தலைவர் என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணங்களையும் எடுத்துக்கூறியிருந்தார். அவரது பேச்சு சீமானை கேள்வி கேட்பதாக அமைந்திருந்ததாகவே அரசியல் விமர்சகர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில்தான் மாவீரர் தின கூட்டத்தில் காளியம்மாள் இதனை தெரிவித்துள்ளார்.

முன்னதான காளியம்மாள் கட்சிக்குள் தனிக்கட்சி நடத்தி வருவதாகவும், தனது ஆதரவாளர்களை திரட்டி வருவதாகவும் சீமான் குற்றம்சாட்டி வந்தார். இதனால் அவர் கட்சி மேடைகளில் ஏற்றாமல் ஓரங்கட்டுப்பட்டு இருந்தார். மேலும், சீமான் பேசியதாக வெளியான வீடியோவில் காளியம்மாள் தனக்கு துரோகம் செய்வதாகவும், அவர் பிசிறு போன்றவர் என்றும் தொடர்ச்சியாக கூறியிருந்தார். அத்துடன், அக்கட்சி நிர்வாகிகளே வலைதளங்களில் காளியம்மாளை கடுமையாக விமர்ச்சித்து வந்தனர். எனினும் காளியம்மாள் அவற்றை பொருட்படுத்தாமல் இருந்து வந்தார். இந்த நிலையில், சென்னை பொதுக்கூட்டத்தில் அவரது பேச்சு சீமான் மீதான அதிருப்தியின் வெளிப்பாடே என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

முந்தைய காலங்களில் ஒரு நிர்வாகிகளை கட்சியை விட்டு நீக்க முடிவெடுத்து விட்டால், தலைமை உத்தரவின் பேரில் அவர் குறித்து நிர்வாகிகள் ஐ.டி. விங் நிர்வாகிகள் அவதூறு பரப்பி கட்சியிலிருந்து வெளியேற்றச் செய்வது வழக்கமாக உள்ளது. ஆனால் காளியம்மாள் தானாக கட்சியில் இருந்து வெளியேற மாட்டேன் என்றும், வேண்டுமெனில் அவர்களே நீக்கட்டும் என்றும் கூறி வருகிறார்.  இதனிடையே, கடந்த 5 ஆண்டுகளாக கட்சியை ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புடைய ரவீந்திரன் துரைசாமி வழிநடத்தி வருவதாகவும், அவரது வழிகாட்டுதலின் படியே சீமான் செயல்பட்டு வருவதாகவும் அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி வெற்றி குமரன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், சீமானின் வலதுசாரி சிந்தனைகளை ஆதரிக்க தயாராக உள்ளவர்கள் மட்டும் தான் கட்சியில் இருக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

 

 

 

 

MUST READ