கொடிசியா வளாகத்தில் ஜூன் 4 முதல் 8 வரை நடைபெறவுள்ள INTEC 2026 சர்வதேச இயந்திர மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சி, உலகின் முன்னணி தொழில்நுட்பங்களையும் புதிய கண்டுபிடிப்புகளையும் ஒரே இடத்தில் அறிமுகப்படுத்துகிறது.


தென்னிந்தியாவின் முக்கிய தொழில் நகரமான கோயம்புத்தூரில், பன்னாட்டு அளவிலான ‘இன்டெக் 2026’ தொழிற்கண்காட்சி வரும் ஜூன் 4-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கமான கொடிசியா (CODISSIA) சார்பில் நடத்தப்படும் இந்தக் கண்காட்சி, தொழில்துறையின் எதிர்கால வளர்ச்சிக்கான முக்கிய மேடையாக பார்க்கப்படுகிறது.
21-வது ஆண்டாக நடைபெறும் இந்தக் கண்காட்சியின் முக்கிய கருப்பொருளாக செயற்கை நுண்ணறிவு (AI), ஆட்டோமேஷன் மற்றும் ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தற்போதைய தொழில்துறையில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் உலகளாவிய போட்டிகளை சமாளிக்க நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடு அவசியமாகிவிட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கண்காட்சி தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நிகழ்வின் தலைவர் கே. பொன்னுசாமி மற்றும் கொடிசியா தலைவர் எம். கார்த்திகேயன் ஆகியோர், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பணியாளர் பற்றாக்குறை நிலவுவதாகக் குறிப்பிட்டனர். இந்தச் சூழலில் உற்பத்தித் திறனை அதிகரிக்க ஆட்டோமேஷன் மற்றும் ரோபோ தொழில்நுட்பங்களை தொழிற்சாலைகள் தழுவிக் கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

ஐந்து நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த உற்பத்தி முறைகள், தொழில்துறை ரோபோக்கள், தானியங்கி அமைப்புகள், துல்லியமான அளவீட்டு தொழில்நுட்பங்கள், சிஎன்சி இயந்திரங்கள், லேசர் கட்டிங் மெஷின்கள் மற்றும் ஸ்மார்ட் ஃபேக்டரி அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. மேலும், வாகன உற்பத்தி, விண்வெளித் துறை, பொறியியல் மற்றும் இரசாயனத் தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை அறிமுகப்படுத்தும் தளமாகவும் இந்தக் கண்காட்சி அமையவுள்ளது. கோயம்புத்தூரை உலகளாவிய உற்பத்தி மையமாக முன்னிறுத்துவதே இந்த ஆண்டின் முக்கிய நோக்கமாகும்.
சுமார் 2.6 லட்சம் சதுர அடி பரப்பளவில், 7 அரங்குகளில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் 7 வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் 13 மாநிலங்களைச் சேர்ந்த 460-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 700-க்கும் அதிகமான அரங்குகள் மூலம் தொழில்நுட்ப தயாரிப்புகள் மற்றும் சேவைகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இன்டெக் கண்காட்சியில் அறிமுகமாகும் புதிய தொழில்நுட்பங்களை உள்ளூர் தொழில் நிறுவனங்கள் விரைவாக ஏற்றுக்கொள்வதால், சிறு மற்றும் குறு தொழில்துறையினருக்கு உலகத் தரத்திலான தொழில்நுட்பங்கள் குறைந்த செலவில் கிடைப்பதாக பொன்னுசாமி தெரிவித்தார். இந்தக் கண்காட்சியை ஜப்பானைச் சேர்ந்த ஜின்கி இட்டாய் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் பிரதிநிதி இயக்குநர் டாக்டர் கணோகா ஜூன் 4-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். தினமும் காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை பொதுமக்கள் மற்றும் தொழில்துறையினர் கண்காட்சியைப் பார்வையிடலாம். நுழைவுக் கட்டணம் ஒருவருக்கு ரூ.150 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜூன் 5-ஆம் தேதி கோவை ரேடிசன் ப்ளூ ஹோட்டலில் ‘குளோபல் மேனுஃபேக்ச்சரிங் கிளஸ்டர் விஷன்’ மாநாடும் நடைபெற உள்ளது. இதில் பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தாமஸ் டோஸ் பங்கேற்று மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார். இரண்டாம் தலைமுறை தொழில்முனைவோர் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் குறித்த கலந்துரையாடல்களும் இதில் இடம்பெறவுள்ளன. தொழில்நுட்ப மாற்றங்களையும், உலகளாவிய போட்டிகளையும் எதிர்கொள்ளும் கோவை தொழில்துறைக்கு ‘இன்டெக் 2026’ புதிய வளர்ச்சிப் பாதையை உருவாக்கும் என தொழில்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஜப்பான் விதித்த திடீர் தடை – இந்திய மாம்பழ விவசாயிகள் அதிர்ச்சி
