சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு படையெடுக்கும் பக்கதர்களால். வண்டலூர் முதல் பெருங்களத்தூர் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நோக்கி திரளாக புறப்பட்டு வருவதால், தாம்பரம் மற்றும் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.
நாளை நடைபெறவுள்ள சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலையில் கிரிவலம் மற்றும் வழிபாடு மேற்கொள்ள பக்தர்கள் பெருமளவில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால், சென்னை நகரில் இருந்து கிளம்பும் பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்களில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் வசதிக்காக இரண்டு நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டாலும், பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பகுதியில் இன்று காலை முதலே கூட்ட நெரிசல் காணப்பட்டது. அதே நேரத்தில், பலர் தங்கள் சொந்த வாகனங்களிலும் திருவண்ணாமலை நோக்கி புறப்பட்டதால், ஜிஎஸ்டி சாலை முழுவதும் வாகனங்கள் நிரம்பியுள்ளன.

இதன் விளைவாக, வண்டலூர் முதல் பெருங்களத்தூர் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. காலை பணிக்கு செல்லும் மக்கள், அரசு பேருந்துகள் மற்றும் திருவிழாவிற்கு செல்லும் பக்தர்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் சாலையில் திரண்டதால், வாகனங்கள் மெதுவாக நகரும் நிலை உருவாகியுள்ளது.
போக்குவரத்து நெரிசலை சமாளிக்க காவல்துறையினர் தீவிரமாக பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், இன்று மாலை மேலும் அதிகமான பக்தர்கள் திருவண்ணாமலை நோக்கி புறப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கூடுதலாக போக்குவரத்து காவலர்களை நியமித்து சீரான போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை: திருநங்கைகளுக்கான அழகு போட்டியில் சென்னையை சேர்ந்த லத்திகா முதலிடம்
