சபரிமலை சீசன், விடுமுறை தினம் காரணமாக பழநி மலைக்கோயிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழநியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வார விடுமுறை, விசேஷ நாட்களில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். தற்போது சபரிமலை சீசன் என்பதால் ஐயப்ப பக்தர்கள் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது.
மேலும், நேற்று விடுமுறை நாள் என்பதால் பக்தர்கள் வருகை மிகவும் அதிகமாக இருந்தது. வின்ச், ரோப்கார் நிலையங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பயணம் செய்தனர். மலைக்கோயிலில் பக்தர்கள் சுற்றுவட்ட முறையில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனால் சுமார் 3 மணிநேரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதான கூடத்திலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து உணவருந்தினர்.

பழநி பஸ் நிலையம், ரயில் நிலையத்திலும் கூட்டம் அலைமோதியது. அடிவார சாலைகளில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்தன. இதனால் பாலசமுத்திரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தைப்பூசம், பங்குனி உத்திரம், கோடை விடுமுறை என மே மாதம் வரை சீசன் காலம் என்பதால் பழநிக்கு கூடுதல் பஸ்கள், சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரூ.17.82 கோடியில் 68 நூலகக் கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார்


