இளைஞர்களை வெளிநாட்டிற்கு படிக்க அனுப்பிய மற்றும் அனுப்பும் பெற்றோர்களில் 78 சதவீதம் பேர், தங்களது பணி ஓய்வுக்கு பிறகு தேவையான பணத்தை சேமித்து வைப்பது இல்லை என்பது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
முன்பு பெரும் பணம் படைத்தவர்கள் மட்டுமே, தங்களது குழந்தைகளை வெளிநாட்டிற்கு சென்று படிக்க வைத்தனர். தற்போது இந்த நிலை மாறி உள்ளது. ஏராளமான இளைஞர்கள் வெளிநாட்டில் படிக்க வேண்டும் என விரும்புகின்றனர். அவர்களின் கனவை பெற்றோர்கள் நிறைவேற்றி வருகின்றனர். அத்தகைய பெற்றோர்கள் குறித்து எச்எஸ்பிசி வங்கி ஆய்வு ஒன்றை நடத்தியது. 1,456 பேரிடம் இது குறித்து கருத்து கேட்கப்பட்டது.
அதில், வெளிநாட்டிற்கு படிக்க அனுப்பிய மற்றும் அனுப்ப உள்ள பெற்றோர்களில் 78 சதவீதம் பேர், பணி ஓய்வுக்கு பிறகு தேவையான பணத்தை சேமித்து வைப்பது இல்லை என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் அதற்கான திட்டமிடலை விட குழந்தைகளின் கல்வியே முக்கியம் என கருதுகின்றனர்.
2025ம் ஆண்டு வெளிநாடுகளில் 20 லட்சம் இந்திய மாணவர்கள் படிப்பார்கள் என கணக்கிடப்பட்டு உள்ளது. இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிப்பதை போல் செலவும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. பெற்றோர்கள் தங்கள் ஓய்வுக்கு பிறகு தேவைக்காக சேமித்துவைத்த பணத்தில் 64 சதவீதத்தை தங்களது குழந்தைகள் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளில் 3 அல்லது 4 ஆண்டு பட்டப்படிப்புக்கு மட்டும் செலவு செய்கின்றனர்.
53 சதவீதம் பேர் மட்டுமே, தங்களது குழந்தைகளின் கல்விக்கு தேவையான பணத்தை சேமித்து வைக்கின்றனர். எஞ்சிய 48 சதவீதம் பேர் உள்ளனர். இவர்களில் 51 சதவீதம் பேர் கல்வி உதவித்தொகையை நம்பி உள்ளனர். 40 சதவீதம் பேர் கடன் வாங்குகின்றனர். சிலர், குழந்தைகளின் படிப்புக்காக சொத்தை விற்கவும் செய்கின்றனர். இவ்வாறு அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.