முதல்வர் மருந்தகங்களை தொடங்க இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யும் வழிமுறைகள், தேவையான ஆவணங்கள் மற்றும் திட்ட விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு. www.mudhalvarmarunthagam.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
மருந்தாளுநர் படிப்பு முடிக்கப்பட்டதற்கான சான்றிதழ், மருந்தக தொழில் குழுமம் பதிவு சான்றிதழ், மருந்தக தொழில் குழுமம் அடையாள அட்டை மற்றும் பிற சான்றிதழ்கள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சொந்த இடம் (அல்லது) வாடகை / குத்தகை ஒப்பந்தம் சமர்பிக்க வேண்டும். சொத்து வரி, மின்சாரம் கட்டண ரசீது, தண்ணீர் வரி ரசீது சமர்பிக்க வேண்டும். 110 சதுர அடி கார்பெட் ஏரியா உள்ள கடை, குளிர்சாதன பெட்டி, ஏர் கண்டிஷனர், இணைய இணைப்பு உடன் கணினி, மருந்தக SOP இன் படி அகரவரிசை பெட்டிகளுடன் இருக்கும் அமைப்பு இருக்க வேண்டும். இதர ஆவணங்களாக, மருந்தக அனுமதி படிவங்கள் (படிவம் 20, 21, 19), அனுபவ சான்றிதழ், விரிவான திட்ட அறிக்கை (DPR), ஜிஎஸ்டி சான்றிதழ், PANCARD, ஏற்கனவே உள்ள கடன் விவரங்கள் மற்றும் தற்போதைய நிலை (வங்கி NOC) ஆகியவற்றை சமர்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் பார்மசி கவுன்சிலில் சான்றிதழ் பதிவு செய்திருக்க வேண்டும்
மருந்தகத்திற்கு தேர்வு செய்யப்படும் இடம் பொது மக்கள் எளிதில் அணுகும் இடமாக இருக்க வேண்டும் .ஒரே இடத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படின் கீழ்க்கண்ட முன்னுரிமை அடிப்படையில் தெரிவு பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்கள் D.Pharm Or B. Pharm படிப்பினை முடித்த தொழில் முனைவோர்கள். பெண்கள் / ஆதரவற்ற விதவைகள்/ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பொதுமக்கள் எளிதில் அணுகக்கூடிய இடம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். பெறப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்ப்பதற்கான கள அதிகாரிக்கு அனுப்பப்படும். கள அதிகாரியின் பரிந்துரைகளைப் பெற்ற பிறகு, விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்படும்.
ஆய்வு செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் (TNCCF) உடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஒப்பந்தம் ஏற்படுத்திய பிறகு, விண்ணப்பதாரரின் வங்கிக் கணக்கில் முதல் தவணையாக ரூ. 1.5 லட்சம் தொகை விடுவிக்கப்படும். உட்கட்டமைப்புத் தயார்நிலையில் உள்ளதை இரண்டாவது களச் சரிபார்ப்புக்குப் பிறகு, மானியத்தின் இறுதித் தவணை ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள ஜெனரிக் மருந்துகளாக அளிக்கப்படும்.
கடன் பெற விரும்பும் தொழில்முனைவோருக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்முனைவோருக்கு அரசு மானியமாக ரூ. 3 லட்சம் வழங்கப்படும். இதில், 50% உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரொக்கமாகவும், 50% மருந்துகளாக விற்பனைக்கு வழங்கப்படும். தேவைப்படும் மூலக்கூறு மருந்துகளை Tamilnadu Consumer Cooperative Federation (TNCCF) மற்றும் மாவட்ட கிடங்குகள் மூலம் மட்டுமே வாங்கப்பட வேண்டும். மருந்தகம் நிலையான இயக்கமுறை வழிகாட்டுதல்களை (SOP) பின்பற்றி நடத்திட வேண்டும். TNCCF உடனான ஒப்பந்த நிபந்தனைகளை வழுவாது பின்பற்ற வேண்டும்.
கோடை விடுமுறையில் வெளியாகும் ‘கூலி’ ….. உறுதி செய்த லோகேஷ் கனகராஜ்!
‘முதல்வர் மருந்தகம்‘ எனும் பதாகையின்கீழ் மருந்தகம் குறைந்தபட்சம் மூன்றாண்டுகள் நடத்தப்படும் எனும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் மட்டுமே மானிய தொகை வழங்கப்படுகிறது. எனவே, முதல்வர் மருந்தகம் செயல்படும் கட்டடம் செயல்படும் காலம் வரை வேறு எந்த ஒரு நோக்கத்திற்கும் பயன்படுத்தக் கூடாது.