டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில், சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆனதையொட்டி, ரூபாய் 75 ரூபாய் நாணயத்தையும், நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பை நினைவுக்கூறும் வகையில் தபால் தலையையும் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

பின்னர் புதிய நாடாளுமன்றத்தைத் திறந்து வைத்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “புதிய நாடாளுமன்றத்தைத் திறந்த இந்த நாள் வரலாற்று சிறப்புமிக்கது. இது வெறும் கட்டடம் அல்ல; இந்திய மக்களின் கனவுகளைப் பிரதிபலிக்கிறது. புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவில் சர்வ மத பிரார்த்தனை நடைபெற்றது. புதிய நாடாளுமன்றம் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கிறது.
புதிய பாதைகளில் பயணம் செய்வதே புதிய குறிக்கோள்களை அடைய முடியும். புதிய பாதையில் புதிய பயணத்தை நம் நாடு தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டு ஆதீனங்களின் ஆசியுடன் நாடாளுமன்ற வளாகத்தில் செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. செங்கோல் என்பது கடமையின் பாதையில் செல்ல வேண்டும் என்பதற்கான அடையாளம். ராஜாஜி மற்றும் ஆதீனத்தை சேர்ந்தவர்களின் பங்களிப்புடன் செங்கோல் உருவாக்கப்பட்டது.

900 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் ஜனநாயக பாரம்பரியம் கடைப்பிடிக்கப்பட்டது. சோழர் காலத்தில் நீதி மற்றும் நல்லாட்சியின் அடையாளமாக செங்கோல் விளங்கியது. ஆட்சி, அதிகார மாற்றத்துக்கான அடையாளம் செங்கோல். செங்கோல் புனிதமானது, முக்கியத்துவம் வாய்ந்தது. உலகமே இந்தியாவை உற்று நோக்குகிறது; இந்தியா முன்னேறினால் உலகமே முன்னேறும். ஆங்கிலேயர் காலத்தில் அதிகாரப் பகிர்வுக்கு பயன்பட்ட செங்கோலுக்கு உரிய மதிப்பு அளித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விழாவில், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பிரதமர் தேவ கவுடா, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.