பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய பாஜக அரசுக்கு எதிராகச் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகக் கருத்துகளைப் பதிவிட்டு வந்த கேரள பெண் காவல் அதிகாரி பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுப்புழா காவல் நிலையத்தில் செயல்பட்டு வரும் சைபர் கிரைம் பிரிவில் பெண் காவல் அதிகாரியாகப் பணியாற்றி வருபவர் சஜீதா சலீம்.

யுவ மோர்ச்சை புகாரும் விசாரணை அறிக்கையும்
காவல் அதிகாரியான சஜீதா சலீம் தனது தனிப்பட்ட முகநூல் (Facebook) பக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும், மத்திய பாஜக அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும் அவதூறான கருத்துகளைப் பகிர்ந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின.
இது தொடர்பாக இடுக்கி மாவட்ட பாஜக இளைஞரணியான யுவ மோர்ச்சாவின் தலைவர், காவல் துறை உயர் அதிகாரிகளிடம் முறையான புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் துறை ரீதியான விசாரணை முடுக்கிவிடப்பட்டது. விசாரணையில், காவல் அதிகாரி சஜீதா சலீம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகக் கருத்துகளைப் பதிவிட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
சைபர் கிரைம் ஐஜி அதிரடி உத்தரவு
இது தவிர, டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான பதிவுகளைப் பரப்பியதாகவும், மத்திய அரசு குறித்து தவறான தகவல்களையும் இழிவான கருத்துகளையும் பகிர்ந்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதன் மூலம் அரசுப் பணியில் இருக்கும் ஒரு காவல் அதிகாரி, சமூக ஊடகப் பயன்பாடு குறித்துக் காவல்துறை தலைமையகம் வகுத்துள்ள நடத்தை வழிகாட்டுதல்களை முற்றிலும் மீறியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் பெண் காவல் அதிகாரி சஜீதா சலீமை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து சைபர் கிரைம் பிரிவு ஐஜி உத்தரவிட்டுள்ளார். அரசுப் பணியில் இருந்துகொண்டு பிரதமருக்கு எதிராகச் சமூக வலைதளத்தில் பதிவிட்ட அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
