மக்களவை உறுப்பினர் என்ற முறையில் வழங்கப்பட்ட அரசு பங்களாவை ஏப்ரல் 22ம் தேதிக்குள் காலி செய்வதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் பரப்புரையில் ஈடுபட்ட ராகுல் காந்தி, மோடி என்னும் பெயரை பயன்படுத்தி சர்ச்சையாக பேசியது தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. கடந்த வாரம் இந்த வழக்கை விசாரித்த குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நீதிமன்றம் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. வயநாடு தொகுதி எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தியை மக்களவைப் செயலகம் தகுதி நீக்கம் செய்தது. மேலும், வயநாடு தொகுதி காலியானதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் எம்.பி., பதவியை இழந்த ஒருவர் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என்கிற 1 மாதத்திற்குள் அரசு பங்களாவை காலி செய்யுமாறும் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பபட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மக்களவை துணை செயலாளர் மோஹித் ராஜனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “ 20 ஆண்டுகளாக அரசு பங்களாவில் இருந்த என்னுடைய மகிழ்ச்சியான தருணங்களை மறக்க முடியாது. ஏப்ரல் 22ம் தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்கிறேன். விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். ராகுல் காந்தி கடந்த 2004 ம் ஆண்டு பொதுத்தேர்தலில் உத்தரப்பிரதேசம் அமேதி தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி., ஆனது முதல் டெல்லியில் உள்ள எண் 12, துக்ளக் லேனில் உள்ள அரசு பங்களாவில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.