நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ தேர்வுகளில் ஏற்பட்டதாகக் கூறப்படும் முறைகேடுகளை கண்டித்து டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் கல்வி அமைப்பில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு அவசியம் என வலியுறுத்தப்பட்டதுடன், ஒன்றிய அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர் அமைப்பினர் கலந்து கொண்டனர். சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சக் உள்ளிட்டோர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

போராட்டத்தில் பேசிய காக்ரோச் ஜனதா கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே, கல்வித்துறையில் தொடர்ந்து எழுந்துவரும் சர்ச்சைகளுக்கு ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று மாலை 5 மணிக்குள் பதவி விலக வேண்டும் என்றும், இல்லையெனில் நாடு முழுவதும் போராட்டங்களை தீவிரப்படுத்துவோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளாா்

அரசை விமர்சிப்பவர்கள் மற்றும் எதிர்ப்புக் குரல் கொடுப்பவர்கள் மீது அச்சுறுத்தல் சூழல் நிலவுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். “என்னை கைது செய்து விடுவார்களோ என்ற அச்சம் என் பெற்றோருக்குக் கூட உள்ளது. அரசை எதிர்க்கும் ஒவ்வொருவரின் குடும்பமும் இதே நிலையை எதிர்கொள்கிறது” என்று அபிஜீத் தீப்கே தெரிவித்தார். இதனிடையே, அடுத்த சனிக்கிழமையும் டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என காக்ரோச் ஜனதா கட்சி அறிவித்துள்ளது. கல்வி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்துறையில் நடைபெறும் முறைகேடுகளுக்கு எதிராக களம் இறங்கும் கரப்பான் பூச்சி கட்சி…
