spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஜாதிவாரி கணக்கெடுப்பு கேட்டு ராகுல்காந்தியின் கண்ணியமான பேச்சு, பாஜக தரம் தாழ்ந்த விமர்சனம் - கி.வீரமணி

ஜாதிவாரி கணக்கெடுப்பு கேட்டு ராகுல்காந்தியின் கண்ணியமான பேச்சு, பாஜக தரம் தாழ்ந்த விமர்சனம் – கி.வீரமணி

-

- Advertisement -

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கண்ணியத்துடன் பேசினார். அதை பாஜகவினர் தரம்தாழ்து விமர்சனம் செய்ததாக திராவிடர் கழத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு கேட்டு ராகுல்காந்தியின் கண்ணியமான பேச்சு, பாஜக தரம் தாழ்ந்த விமர்சனம் - கி.வீரமணி

we-r-hiring

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வைத்த கோரிக்கைக்கு உரிய பதில் அளிக்காமல், ராகுலையும், அவரது குடும்பத்தையும்பற்றி தனிப்பட்ட முறையில் ஆளும் பி.ஜே.பி.யைச் சேர்ந்தவர் தரக்குறைவாகப் பேசுவதும், அதனைப் பிரதமர் பதவியில் இருக்கக்கூடியவர் பாராட்டுவதும் சரியானதுதானா? பா.ஜ.க. உறுப்பினர் தரந்தாழ்ந்து பேசிய நிலையிலும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கண்ணியமான முறையில் பதில் அளித்தது பாராட்டுக்குரியது. அனைத்தையும் பொதுமக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்  என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

நடைபெற்றுவரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், இளந்தலைவர் – எதிர்க்கட்சித் தலைவராக, ஆளுங்கட்சிக்கு மிகவும் சிம்ம சொப்பனமாகியுள்ள ராகுல்காந்தி – அவர் முன்வைத்த ஜாதிவாரிக் கணக்கெடுப்புக் கோரிக்கை என்ற – பீகாரின் பா.ஜ.க. கூட்டணிக் கட்சியான அய்க்கிய ஜனதா தளம் உள்பட நாடு தழுவிய அளவில் பல கட்சிகளும் வைத்துள்ள அக்கோரிக்கைக்குச் சரியான முறையில் பதில் அளிக்க வக்கில்லாத, வகைதொகை தெரியாத பா.ஜ.க.வினர், நேற்று (30.7.2024) மக்களவையில், எதிர்க்கட்சித் தலைவர் பதவியின் மாண்பையே குலைக்கும் வகையில், தரங்கெட்டுப் பேசியுள்ளனர்; ராகுல் காந்தி அவர்களை தனிப்பட்ட முறையில் தாக்கி, தங்கள் தரம் என்னவென்பதை உலகுக்கு உணர்த்தியுள்ளனர்!

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் குறித்துத் பா.ஜ.க.வின் தரங்கெட்ட பேச்சு!

‘‘ராகுலின் தந்தையும், மேனாள் பிரதமருமான ராஜீவ் பெயருக்கும் தாமரை என்று அர்த்தம். அப்படியானால், அவருடைய பெயரும் வன்முறையை, அச்சத்தை குறிப்பிடுகிறதா?”

‘‘ராகுலின் காங்கிரசுக்கு, ஓ.பி.சி. என்றால், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் என்று அர்த்தம் கிடையாது. தன் மைத்துனருக்கு கமிஷன் என்பதே ராகுலின் விளக்கமாகும்.”

‘‘ஓ.பி.சி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க ராஜீவ் எதிர்ப்பு தெரிவித்தது ராகுலுக்குத் தெரியுமா?”

‘‘தன் ஜாதிப் பெயரே தெரியாதவர், ஜாதிக் கணக்கெடுப்பு குறித்துப் பேசலாமா?”

என்றும் மிகவும் கீழிறக்கத்தோடு அனுராக்தாக்கூர் என்பவர் பேசியுள்ளார்!

தனிப்பட்ட வகையில் – மரபு மீறிப் பேசுவதா?

எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய பிரச்சினைக்கு உரிய முறையில் பதில் தந்து, ஜாதி வாரிக் கணக்கெடுப்பை நடத்தப் போகிறதா? இல்லையா? என்ற தங்களது அரசின் நிலைப்பாட்டினைத் தெளிவுபடுத்த முடியாத நிலையில், தனிப்பட்ட முறையில் ராஜீவ் காந்தி, ராகுல், அவர் மைத்துனர் என்று அவையில் இல்லாதவர்கள் பெயரை எல்லாம், அவை மரபுக்கு மீறிய வகையில் பேசியுள்ளார்!

கேட்ட கேள்விக்கு ராஜீவ் பெயர் ஆராய்ச்சியா, அதற்குப் பதில், மலர் – தாமரை மீது யாருக்கென்ன கோபம்? தாமரை சின்னத்தை வைத்துக்கொண்டு, அதன் சேற்றினையே தங்களது முகவிலாசம் என்று காட்டும் பா.ஜ.க. மக்களுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் கேள்விக்குறியாகி உள்ளது இப்போது!

கர்நாடக மாநில துணை முதலமைசார் டி.கே.சிவகுமார் பிரதமருடன் சந்திப்பு

மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்திய  வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள் யார்?

மண்டல் கமிஷன் எதிர்ப்பைப்பற்றிப் பேச, பா.ஜ.க.வுக்குத் தகுதி உண்டா? சிறிதும் கிடையாது. காரணம், ‘‘அதன் ஒரு பரிந்துரையான வேலை வாய்ப்பில் 27 சதவிகிதம் இட ஒதுக்கீடு தந்து தனது ஆட்சியில் அதை அமல்படுத்தியதற்காக அவரது ஆட்சியை 10, 11 மாதங்களில் வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து, மண்டலுக்குப் பதில் ‘‘கமண்டல்” – அயோத்தி இராமன் கோவில் பிரச்சினையை கையிலெடுத்த உங்கள் கட்சியின் பழைய வரலாறு உங்களுக்குத் தெரிந்திருந்தால்,” இப்படி பேசியிருக்கமாட்டீர்கள்!

பழைய காங்கிரஸ் ஆட்சியைப்பற்றி, இப்போது அடிக்கடிப் பேசுகின்ற பிரதமருக்கோ, அவரது அமைச்சர்களுக்கோ அல்லது அமைச்சர் பதவி இழந்த அனுராக் தாக்கூர் போன்றவர்களுக்கோ அப்படிப் பேசுவதற்குத் தார்மீக உரிமை உண்டா?

அதற்காகத்தானே ஆட்சியை, ஜனநாயகத்தில் மாற்றினார்கள்.

அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம் தந்தை பெரியார் போராட்டத்தால் நடந்தது!

அதற்கு முன்னால் முதலாவது அரசமைப்புச் சட்டத்தின் 15(4) என்ற – பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர், சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டோரே என்ற முதலாவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை, தமி்ழ்நாட்டில் தந்தை பெரியார் அவர்கள் நடத்திய, சமூகநீதிப் போராட்டத்தின் விளைவாக ஜனநாயக உணர்வுடன் நிறைவேற்றியவர் அன்றைய காங்கிரஸ் பிரதமர், ராகுலின் ‘கொள்ளுத் தாத்தா’ பண்டித ஜவகர்லால் நேரு – அதற்கு உறுதுணையாக இருந்தது அமைச்சர் டாக்டர் அம்பேத்கர் என்ற வரலாறு ‘‘அனுராக் தாக்கூர்களுக்கு‘‘த் தெரியாது. காரணம், அப்போது அவர்கள் பிறந்திருந்தார்களா? அல்லது பள்ளிப் பருவத்தினராகத்தான் இருந்திருக்க முடியும்?

ராகுலின் ஜாதி ஆராய்ச்சி உங்கள் கட்சிப் பக்கம் திரும்பினால் என்னவாகும்? தேவையா, இவை.

இதுவா இப்போது இதற்குரிய பதில்?

மிகப் பெருந்தன்மையோடு பேசிய  எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்!

மிகப்பெருந்தன்மையோடு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தத் தரங்கெட்ட வார்த்தைகளை சகிப்புத்தன்மையோடு கேட்டுத் தந்த பதில், பொறுப்புள்ளவர்களானால் அவர்களையே வெட்கித் தலைகுனிய வைக்கும்!

‘‘நீங்கள் என்னை எவ்வளவு தரக்குறைவாகப் பேசினாலும், என்னை இழிவுபடுத்த நினைத்தாலும் கவலையில்லை – அதற்காக நீங்கள் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று நான் கேட்கமாட்டேன். ஜாதிவாரிக் கணக்கெடுப்பை இந்த அவையில் நிறைவேற்றிக் காட்டுவோம்‘‘ என்று பெருந்தன்மையோடு, மற்றவர்களை வெட்கப்படத்தக்க வயைில், நாடே யார், எப்படி என்று புரிந்துகொள்ளும் வகையில் பேசியுள்ளது– கண்ணியம் எங்கே, யாரிடத்தில், எந்தப் பக்கம் இருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது!

இப்பேச்சினை – அனுராக் தாக்கூர் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகளை, அவைக் குறிப்பிலிருந்து நீக்குவதாக பேரவைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் பேச்சு –  அவர் பதவிக்கான மாண்பா?

அது ஒருபுறம் – சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி, நம் இளம் மற்றும் ஆற்றல் உள்ள எதிர்க்கட்சித் தலைவரைப்பற்றி அனுராக் தாக்கூர் மக்களவையில் பேசியதை, அனைவரும் கேட்கவேண்டும். உண்மைகளை, நகைச்சுவையுடன் கலந்து பேசியது, ‘‘இந்தியா கூட்டணியின் பொய் அரசியல் பிரச்சாரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது‘‘ என்று பேசியுள்ளது அவர் வகிக்கும் பெரிய பதவிக்குரிய மாண்புக்குரிய விழுமியம் ஆகுமா?

இது ஓர் அவலச்சுவை (in bad taste) ஆகாதா?

நாட்டு மக்கள் கவனித்துக் கொண்டுள்ளனர். இதற்கான விளைவுகள் ‘சக்கரவியூகங்களை’யெல்லாம் தாண்டிய மக்கள் வியூகங்களாக மாறிடும்!

தம் கட்சிக்காரர் தரம் தாழ்ந்து பேசினால் கண்டிக்க முன்வரவேண்டாமா?

பொதுக் கணக்கெடுப்பு நடத்தவேண்டிய அரசமைப்புச் சட்டக் கடமை எந்த அரசுக்கும் உண்டு. அந்த அரசு, தனது கடமையிலிருந்து வழுவலாமா?

தன் கட்சிக்காரர் தரந்தாழ்ந்தால், தலைமை அவர்களைக் கண்டித்துத் திருத்த முன்வரவேண்டும்; மாறாக, ‘‘பலே, பலே, சபாஷ்! கேளுங்கள், கேளுங்கள்!‘‘ என்று பின்பாட்டுப் பாடினால், அத்தலைமைபற்றிய உண்மை மதிப்பீடு உலக வெளிச்சமாகிவிடும் என்பது உறுதி.

MUST READ