இதற்குதான் பிரதமர் படித்திருக்க வேண்டும்- அரவிந்த் கெஜ்ரிவால்
ரூ.2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டு நவம்பர் 2016 இல் இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934 இன் பிரிவு 24(1) இன் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது.
முதன்மையாக அப்போது புழக்கத்தில் இருந்த அனைத்து 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் மதிப்புள்ள நோட்டுகளின் சட்டப்பூர்வ பரிவர்த்தனையை திரும்பப் பெற்ற பிறகு பொருளாதாரத்தின் நாணயத் தேவையை விரைவாகப் பூர்த்தி செய்யும் நோக்கத்தில், போதுமான அளவில் மற்ற விகிதாசாரத்தில் ரூபாய் நோட்டுகள் கிடைப்பதை உறுதி செய்து, பின்னர் 2018-19ல் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தப்பட்டது.
பெரும்பாலான 2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் மார்ச் 2017 க்கு முன்பு வெளியிடப்பட்டவை. அவற்றின் ஆயுட்காலம் 4-5 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் சாதாரணமான பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படுவதில்லை என்பதும் கவனிக்கப்படுகிறது. பொதுமக்களின் கரன்சி தேவையை பூர்த்தி செய்ய இதர குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகளின் இருப்பு போதுமானதாக உள்ளதாகவும், இதனால் இந்திய ரிசர்வ் வங்கியின் “தூய்மையான ரூபாய் தாள் கொள்கையின்” படி, 2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
ரூ.2,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், “ரூ.2,000 நோட்டால் ஊழல் ஒழியும் என்றார்கள், தற்போது ரூ.2,000 நோட்டை தடை செய்தால் ஊழல் ஒழியும் என்கிறார்கள். பிரதமராக இருப்பவர் படித்துருக்க வேண்டும் என்று இதற்காகத்தான் கூறுகிறோம். படிக்காத பிரதமரிடம் யார் எதை வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் பாதிக்கப்படுவது மக்கள்தான்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.