ராகுல் காந்தியை சந்திக்கிறார் சித்தராமையா
கர்நாடக முதலமைச்சர் தேர்வில் இழுபறி நீடித்துவரும் நிலையில் ராகுலை சித்தராமையா இன்று சந்திக்கவுள்ளார்.
நடந்து முடிந்த கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 135 சட்டப்பேரவைத் தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்ற நிலையில், முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கட்சி தலைமைக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ.களைத் தனித்தனியாக அழைத்துப் பேசிய கட்சியின் மேலிடப் பார்வையாளர்கள், அவர்களிடம் எழுத்துப்பூர்வமான கடிதத்தைப் பெற்று, டெல்லியில் உள்ள கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் பதவிக்கு முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில், டெல்லியில் முகாமிட்டுள்ள சித்தராமையா, முற்பகல் 11.30 மணியளவில் ராகுல்காந்தி இல்லத்தில் அவரை சந்திக்கவுள்ளார். சுமார் 100 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தனக்கு இருப்பதாக அவர் ராகுலிடம் தெரிவிக்க உள்ளார். அதே சமயம் காங்கிரஸ் தலைவர் கார்கே, சித்தராமையா, டி.கே. சிவக்குமாரை இன்று தனித்தனியே சந்திக்க இருக்கிறார்.