Homeசெய்திகள்இந்தியாபுல்டோசர் மூலம் வீடுகளை இடிக்கும் விவகாரம் - உச்சநீதிமன்றம் கண்டனம்

புல்டோசர் மூலம் வீடுகளை இடிக்கும் விவகாரம் – உச்சநீதிமன்றம் கண்டனம்

-

குற்ற வழக்குகளில் கைதானவர்களின் வீடுகளை புல்டோசர் மூலம் இடித்து அகற்றுவதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேசம், அசாம், அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டவர்களின் வீடுகளை புல்டோசர் மூலம் இடிப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய், கே.வி.விஸ்வநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான முத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, எவ்வித முன்னறிவிப்பு இன்றி, பழீவாங்கும் நடவடிகையாகவே வீடுகள் இடிக்கப்படுவதாகவும், 50 ஆண்டுகளுக்கு மேல் குடியிருக்கும் வீடுகள் கூட இடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கும் அவலம் ஏற்படுவதாக தெரிவித்தார்.

உச்சநீதிமன்றம்

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், குற்ற வழக்குகளில் கைதானவர்களின் வீடுகளை புல்டோசர் மூலம் இடித்து அகற்றுவதற்கு கண்டனம் தெரிவித்தனர். குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டவர்களின் வீடுகளை புல்டோசர் மூலம் மாநில அரசுகள் இடித்து தள்ளுவது எப்படி நியாயம்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டால் கூட வீடுகள் இடிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், ஒருவர் குற்றம் சாட்டப்பட்டவர் என்பதற்காக அவருடைய வீட்டை இடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் வீடுகளை திடீரென ஆக்கிரமிப்பு என்று கூறி இடிப்பது ஏன்? என்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், நாடு முழுவதும் வீடுகளை இடிப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் அடங்கிய வழீகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை வரும் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

 

MUST READ