டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஸ் சிசோடியா ஜாமீன் மனுக்கள் மீது பதிலளிக்குமாறு சிபிஐ மற்றும் அமலாக்க துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவு.
டெல்லி மதுபான கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லி அரசின் முன்னாள் துணை முதலமைச்சர் மணிஸ் சிசோடியா கடந்த ஆண்டு அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

வழக்கின் விசாரணை நீதிமன்றமான ரோஸ் அவன்யூ நீதிமன்றம் , டெல்லி உயர்நீதிமன்றம் உள்ளிட்டவை மனிஸ் சிசோடியா மீதான ஜாமின் மனுவை நிராகரித்தது இதனை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி சிசோடியா தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிசோடியா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுமார் 16 மாதங்களாக சிசோடியா சிறையில் இருப்பதாகவும் கடந்தாண்டு அக்டோபர் மாதம் வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்கவில்லை என்றால் உச்சநீதிமன்றத்தை நாடுமாறு கூறி சிசோடியாவின் ஜாமினு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாக கூறப்பட்டது.
அதனை தொடர்ந்து இப்போது வரை வழக்கின் விசாரணை தொடக்க கட்டத்திலேயே உள்ளதாகவும் எனவே உச்சநீதிமன்றத்தை ஜாமீன் கோரி நாடி உள்ளதாகவும் சிசோடியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜாமீன் கோரிய மனு மீது 2 வாரங்களில் பதிலளிக்குமாறு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை ஜூலை 29ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.