நீட் முதுநிலை தேர்வை ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் நாளை விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது.
கடந்த மே மாதம் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண்கள் வழங்கியது, ஒரே மையத்தில் தேர்வெழுதிய பலர் முழு மதிப்பெண்கள் பெற்றது என பல்வேறு முறைகேடுகள் அரங்கேறின. முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், இளநிலை நீட் தேர்வு முடிவுகள் மிண்டும் வெளியிடப்பட்டு, மருத்துவ கலந்தாய்வுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த எம்.டி., எம்.எஸ். போன்ற முதுநிலை மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கான நீட் தேர்வு, தேர்வுக்கு முந்தைய நாள் இரவு திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் வரும் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வை தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுத உள்ளனர்.
இந்த நிலையில், நீட் முதுநிலை தேர்வுக்கான மையங்கள் தொலை தூரங்களில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறி தேர்வை ஒத்திவைக்க வலியுறுத்தி மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. மேலும் சமூக வலைதளங்களில்நீட் வினாத்தாள் கசிந்ததாகவும், வினாத்தாள் 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில், இந்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது.