உ.பி: நொய்டாவில் ஏ.சி வெடித்து பெரும் தீ விபத்து
வட மாநிலங்களில் உச்சத்தில் பதிவாகும் வெயில் – உ.பி நொய்டாவில் அதிக வெப்பத்தினால் ஏ.சி வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
வடமாநிலங்களில் 50 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பம் பதிவாகி வருகிறது. வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ள பெரும்பாலான மக்கள் அவர்களது வீடுகளில் குளிர்சாதன வசதியை முழுமையாக பயன்படுத்துகின்றனர்.
இப்படி உத்திரபிரதேசம் – டெல்லி எல்லை பகுதியான நொய்டாவில் செக்டர் 100 என்ற இடத்தில் உள்ள லோட்டஸ் புளூ வேர்ல்ட் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் குளிர்சாதன பெட்டி வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள தீயணைப்பு துறை அதிகாரிகள் தீயை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். நொய்டா காவல்துறையினர் தீ விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து முதற்கட்ட விசாரணை மேற்கொண்டதில், நீண்ட நேரமாக குளிர்சாதனத்தை பயன்படுத்தியதில் வெப்பம் அதிகம் ஏற்பட்டு குளிர்சாதன பெட்டி வெடித்ததும், இதனால் தீ விபத்து ஏற்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.
தீ விபத்தை தொடர்ந்து குளிர்சாதனத்தை பயன்படுத்தும் குடியிருப்பு வாசிகள் குளிர்சாதனத்தை தொடர்ந்து இயக்க வேண்டாம் எனவும் ஒவ்வொரு இரண்டு மணி நேரங்களுக்கு ஒரு முறை இடைவேளை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் தீயணைப்பு துறை அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.