காவல்துறையில் காவி மயத்துக்கு இடமில்லை! துணை முதல்வர் எச்சரிக்கை
கர்நாடகாவில் காவல்துறையை காவிமயம் ஆக்குவதை எக்காரணத்தைக் கொண்டும் அனுமதிக்க முடியாது என துணை முதல்வர் டி.கே. சிவகுமார் திட்டமிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு முதல் சட்டமன்ற கூட்டத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. நேற்று 182 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி பிரமாணம் செய்து கொண்டனர். காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு, நேற்று மாலை முதன்முறையாக உயர் காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாநிலம் தழுவிய காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது, காவல்துறை அதிகாரிகள் மக்கள் நலன் சார்ந்து பணியாற்ற வேண்டுமே தவிர காவிமயம் கொள்கையுடன் செயல்பட கூடாது என டி.கே. சிவக்குமார் அறிவுறுத்தினார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் காவல்துறையை விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
பசவராஜின் கருத்துக்கு பதில் அளித்துள்ள துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், “இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி சமத்துவத்தை அமல்படுத்துவதே காவல்துறையின் தலையாயக் கடமை. ஆனால் சில காவல்துறை அதிகாரிகள் நேரடியாக காவி மயம் கொள்கையை கையில் ஏந்தி நேரடியாக அந்த அடையாளங்களுடன் புகைப்படங்களை பதிவு செய்துள்ளனர். இதனை ஏற்றூக்கொள்ள முடியாது. மக்கள் நம்மிடமிருந்து பெரிய மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். எனவே காவல்துறை சமத்துவத்துடனே செயல்பட வேண்டுமென அறிவுறுத்துகிறேன். இதில் தவறு ஏதும் இல்லை. இதே கொள்கையை நாங்கள் தொடர்ந்து கடைபிடிப்போம். எக்காரணத்தைக் கொண்டும் காவல்துறையை காவி மயம் ஆக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது” எனக் கூறியுள்ளார்.