டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டு கட்டாக கோடிக்கணக்கில் பணம் சிக்கிய வழக்கில் இன்று அவரது வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா. டெல்லியின் துக்ளக் சாலையில், இவர் வசிக்கும் அரசு பங்களாவில், கடந்த 14-ம் தேதியன்று தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்த போது, வீட்டின் ஓர் அறையில் இருந்து கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்டது.
நாடு முழுதும் இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பணியிட மாற்றம் செய்து, உச்ச நீதிமன்ற கொலீஜியம் உத்தரவிட்டது.மேலும் இது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அலகாபாத் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் யஷ்வந்த் வர்மா வீட்டில் பணம் கண்டெடுக்கப்பட்டது குறித்து மூத்த நீதிபதி உபாத்யாயா தலைமையிலான 3 நீதிபதிகள அடங்கிய குழு விசரணை நடத்தி அறிக்கை தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நீதிபதிகள் குழு உத்தரவின் பேரில் இன்று டில்லி போலீஸ் படை டில்லி துக்ளக் சாலையில் உள்ள அவரது வீட்டிற்குள் புகுந்து சோதனை நடத்தியது.