சிதரம்பரம் நடராஜர் கோவிலில் தீச்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியது தவறில்லை என்று பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா, சிதம்பரம் நடராஜர் கோயிலில் மைதானம் இருக்கிறது. அந்த மைதானத்தில் தான் விளையாடினார்கள். அது கோலாட்டம், குச்சாட்டம் விளையாடும் இடம், அங்கே கிரிக்கெட் விளையாடியதில் தவறில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் வாஞ்சிநாதன்,
சிதம்பரம் நடராஜர் கோவில் பொதுக் கோவில். பொது சொத்து, அது தீட்சிதர்களுக்கு மட்டும் சொந்தமானது இல்லை. கோவிலுக்குள் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பாஜகவின் ஒருங்கிணைப்பு குழு தலைவராக உள்ள எச்.ராஜா நேரடியாக ஆதரவு தருகிறார். தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு எந்த கருத்தும் தெரிவிக்காமல் மறைமுகமாக ஆதரவு தருகிறார் என நாங்கள் நேரடியாகவே குற்றச்சாட்டை வைக்கிறோம்.
தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியது கருவறையில் இல்லை,கோவிலில் தான். அங்கு விளையாடலாம் என எச். ராஜா பேசுகிறார் இதிலிருந்து பாஜகவின் கோவில் மற்றும் கடவுள் குறித்த நிலைப்பாடு இதுதான்.
கோவில் கருவறை மட்டும் தான் புனிதமான இடம், மற்ற இடங்கள் புனித மற்றவையா என்ற கேள்வியை பாஜகவிற்கு மக்கள் சார்பாக நாங்கள் கேட்க விரும்புகிறோம். எச். ராஜாவின் கருத்துக்கு கண்டனம் வலுத்து வருகிறது.