ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் வழங்கப்படும்: திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் திமுக, பாஜக உறுப்பினர்களிடையே வாக்குவாதம்
திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில், மக்கள் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் கூறியது தொடர்பாக திமுக – பாஜக மாமன்ற உறுப்பினர்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாமன்ற இயல்பு கூட்டம் இன்று 31.08.23 நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் திருமதி இளமதி தலைமை தாங்கினார். துணை மேயர் ராஜப்பா, மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி மற்றும் 46 மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 81 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் 14வது வார்டு பா.ஜ.க. மாமன்ற உறுப்பினர் தனபால் பேசுகையில், திமுக தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாத உரிமை தொகை ஆயிரம் ரூபாய் மாதம் மாதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்பொழுது தகுதி உள்ள பெண்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே அனைத்து பெண்களுக்கும் மாத உரிமைத் தொகையை வழங்க வேண்டும் என மாமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர கோரிக்கை விடுத்தார்.
ஆனால் அதற்கு யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனை எதிர்த்து 8வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் ஆனந்த் பேசுகையில் ஒரு கோடி பெண்களுக்கு மாத உதவித்தொகை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ஒரு கோடியே 26 லட்சம் பெண்களுக்கு மாத உதவித்தொகை வழங்கப்பட உள்ளது என்றார். மேலும், பேசுகையில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலின் போது வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருக்கும் தலா 15 லட்சம் வழங்கப்படும் என நரேந்திர மோடி அறிவித்தார்.
ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை என கேள்வி எழுப்பினார் ஆனால் அதற்கு பா.ஜ.க. மாமன்ற உறுப்பினர் தனபால் அவ்வாறு பிரதமர் தனது பேச்சில் கூறவில்லை என கூறினார். அவர் பேசியது உண்மை என்ன நிரூபித்தால் பதவி விலக தயாரா என திமுக மாமன்ற உறுப்பினர் ஆனந்த் கேள்வி எழுப்பினார்.
இதனால் திமுக மாமன்ற உறுப்பினர்களுக்கும் பா.ஜ.க. மாமன்ற உறுப்பினர் இடையே காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றது. 34வது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினர் பாஸ்கரன் திமுக அரசை பற்றி தவறான தகவலை மாமன்றத்தில் பதிவு செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.
அப்பொழுது அதிமுக, திமுக மாமன்ற உறுப்பினர்களுக்கிடையே காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றது. 2 வது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர் கணேசன் பேசுகையில் :- திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சாலைகள் தெருக்களில் மாடுகள்,நாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்களுக்கு விபத்துக்கள் ஏற்பட கூடிய நிலை உள்ளது. இதை கட்டுப்படுத்த அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர் என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த கமிஷனர் மகேஸ்வரி, மாடு பிடிக்க புது வாகனம் வாங்கி இம்மாதம் மட்டும் 30 மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றார். அதேபோல் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.