”பாஜகவுக்கு 4 எம்எல்ஏக்களை பெற்று தந்தது அதிமுக”- எடப்பாடி பழனிசாமி
ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் கருத்தால் அதிமுக தொண்டா்கள் கொந்தளிப்பில் உள்ளனா். அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அண்ணாமலை அவதூறு பரப்புகிறார். அண்ணாமலையின் பேச்சு அதிமுக தொண்டர்கள் இடையே மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா மீது மதிப்பும் மரியாதையும் உள்ளது. 1998ம் ஆண்டு மத்தியில் முதல்முறையாக பாஜக ஆட்சி அமைக்க அதிமுகதான் காரணம். ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய அண்ணாமலையை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சி, புரட்சித் தலைவியின் உதவியோடு நடைபெற்றது என்பதை மறந்து விடக்கூடாது.
தேசிய அளவில் அரசியல் வழிகாட்டியாக விளங்கியவர் ஜெயலலிதா. பொதுவெளியில் முதிர்ச்சியற்ற வகையில் பேசி வருகிறார் அண்ணாமலை. தமிழக சட்டப்பேரவையில் 20 வருடங்களாக எம்எல்ஏ இல்லாத பாஜகவில் தற்போது 4 எம்.எல்.ஏக்கள் இருப்பதற்கு அதிமுகதான் காரணம்” என்றார்.