
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியும் மோடியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று பாஜகவினர் தீவிரமாக களமிறங்கி இருக்கும் நிலையில் , மோடியை எப்படியும் தோற்கடித்தே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றன எதிர்க்கட்சிகள். பாஜகவிற்கு எதிரான கட்சிகள் அனைத்தும் வரும் 23ஆம் தேதி அன்று பாட்னாவில் ஒன்று கூடுகின்றன . இந்த முக்கிய கூட்டத்தில் திமுகவும் பங்கேற்கின்றன. முதல்வர் மு.க.ஸ்டாலின் பாட்னா பறக்கிறார்.
பாஜகவுக்கு எதிராக பாட்னாவில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று கூடும் அதே நாளில் தமிழகத்தில் அதிமுகவை சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறது பாஜக .

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை வந்தது முதல் கூட்டணி கட்சியில் இருக்கும் அதிமுகவுடன் மோதல் போக்கு நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே வருகிறது. உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து களமிறங்கியதோடு அல்லாமல் அதிமுக மீது விமர்சனம் செய்ய பதிலுக்கு அதிமுகவினரும் கடுமையாக விமர்சனம் செய்ய கூட்டணி முறிந்து போகும் என்று அப்போது பேசப்பட்டது . ஆனால் கட்சியின் முக்கிய தலைவர்கள் களமிறங்கி கூட்டணியை சரி செய்தனர்.
ஈரோடு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் அண்ணாமலைக்குமான மோதல் உச்சத்திற்கு சென்றது . அவ்வளவுதான் அதிமுக -பாஜக கூட்டணி முறிகிறது என்று மீண்டும் பேச்சு எழுந்தது . ஆனால் எடப்பாடி பழனிச்சாமியையும் அண்ணாமலையையும் டெல்லிக்கு அழைத்து இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக முன்னாள் தேசிய தலைவரும் ஆன அமித்ஷா . ஆனால் அதன் பின்னரும் கூட அண்ணாமலை அதிமுகவை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். பதிலுக்கு அதிமுகவும் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகின்றது.

இந்த நிலையில் தான் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக இரண்டு நாட்கள் பயணமாக அமித்ஷா தமிழகம் வந்து சென்ற பின்னர் , ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தமிழகம் ஊழல் மிகுந்த மாநிலமாக இருக்கிறது. முன்னாள் முதல்வர்கள் நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டுள்ளார்கள் என்று கூறியிருந்தார் அண்ணாமலை. இதனால் அதிமுகவினர் கொதித்து எழுந்தனர். அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கூட்டணியில் இருக்கும் அண்ணாமலை அவமதித்துவிட்டார் என்று ஆவேசப்பட்டு வந்தனர்.
கடந்த 13ஆம் தேதி அன்று நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்படும் அளவிற்கு விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது . அதோடு அல்லாமல், அந்த தீர்மானத்தை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பத்திரிகையாளர் முன்னிலையில் படித்துக் காட்டி பரபரப்பு ஏற்படுத்தியினார்.
நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜக தோல்வி கண்டிருக்கும் நிலையில், இந்த ஒரு வெற்றியால் உற்சாகமடைந்திருக்கும் எதிர்க்கட்சிகள் தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக வலுவான ஒரு புதிய அணியை உருவாக்க களமிறங்கி இருக்கின்றன. இதற்காக பீஹார் தலைநகர் பாட்னாவில் வரும் 23ஆம் தேதி அன்று தேசிய அளவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்த இருக்கிறது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் பங்கேற்கிறார்.
எதிர்க்கட்சிகளின் இந்த அதிரடிக்கு பதிலடியாக கூட்டணியில் இருந்து விலகிச் சென்றிருக்கும் தெலுங்கு தேசம் ,அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகளை இணைத்து வலுவான கூட்டணி அமைக்க பாஜக யோசித்து இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் விரிசல் ஏற்பட்டு கூட்டணியில் இருந்து வெளியே வெளியேற நினைக்கும் அதிமுகவை சரி செய்ய நினைக்கிறது பாஜக. அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்து செல்வதை மேல் இடம் விரும்பாததால் அண்ணாமலையை பேச்சுவார்த்தைக்கு அனுப்பினால் அதிமுக- பாஜக இடையேயான மோதல் நீடிக்குமே தவிர நிற்காது. இதனால் தமிழக பாஜக பொறுப்பாளரான சி.டி ரவி அதிமுக நிர்வாகிகளை சந்தித்து சமாதானப்படுத்தி கூட்டணியை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார் பாஜக தேசிய தலைவர் நட்டா .
பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் ஆகவும் இருக்கும் சி.டி. ரவி தன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் இந்த பொறுப்பை கவனத்துடன் கொண்டு , வரும் 23ஆம் தேதி சென்னை வந்து அதிமுக முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி கூட்டணியில் ஏற்பட்டிருக்கும் மனக்கசப்பை போக்கி கூட்டணியை உறுதி செய்ய நினைக்கிறார்.