திமுக அரசின் 18 மாத கால ஆட்சியில் தமிழக மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.சொத்து வரி, மின்கட்டணம், பால் விலை மற்றும் விலைவாசி உயர்வினால் மக்கள் தவித்து வருகின்றனர். அதேபோல் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது.

உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் அதிமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் 9/12/2022 அன்று பேரூராட்சிகளிலும் 13/12/2022 அன்று நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் 14/12/2022 அன்று ஒன்றியங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என முன்னதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
தற்போது, புயல் தமிழநாட்டின் வட மாவட்டங்கள் வழியாக கரையை கடக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருப்பதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் கள்ளக்குறிச்சி, திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் புதுக்கோட்டை உள்ளிட்ட கன மழை பெய்யக்கூடிய மாவட்டங்களில் 09/12/2022 அன்று நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் 16/12/2022 வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்பகுதிகளின் மாவட்ட கழக செயலாளர்கள் மாவட்டங்களுக்கு உட்பட்ட பேரூராட்சிகளில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடுவதாக அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.