spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் போக்குவரத்து நெரிசல்… மேம்பாலம் அமைக்க கோரி பொது மக்கள் கோரிக்கை…

கடலூர் – நெல்லிக்குப்பம் சாலையில் போக்குவரத்து நெரிசல்… மேம்பாலம் அமைக்க கோரி பொது மக்கள் கோரிக்கை…

-

- Advertisement -

கடலூர் – நெல்லிக்குப்பம் சாலையில் அமைந்துள்ள செம்மண்டலம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதை குறைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் போக்குவரத்து நெரிசல்… மேம்பாலம் அமைக்க கோரி பொது மக்கள் கோரிக்கை…கடலூர் – நெல்லிக்குப்பம் சாலையில் அமைந்துள்ள செம்மண்டலம், மாநகரின் பிரதான பகுதிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. வேலை வாய்ப்பு அலுவலகம், அரசு ஐடிஐ, சிட்கோ தொழிற்பேட்டை, வேளாண் துறை அலுவலகங்கள், ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் நிறைந்துள்ளன. கல்வி, வர்த்தகம், போக்குவரத்து என மாநகர வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருகிறது. இங்கு ஆஞ்சநேயர் கோயில் அருகே முக்கிய சாலை சந்திப்பு உள்ளது. கடலூர் மட்டுமின்றி நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்ட மக்கள் புதுச்சேரி, சென்னை செல்வதற்கும் பண்ருட்டி மற்றும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் கடலூர் வருவதற்கும் இந்த சந்திப்பை கடந்து தான் செல்ல வேண்டும்.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. கடலூர், நெல்லிக்குப்பம், கம்பியம்பேட்டை, குண்டுசாலை, பாண்டி சாலை, வரதராஜன் நகர் செல்லும் நேரு தெரு என 6 சாலைகள் சங்கமிக்கும் வகையில் இந்த சந்திப்பு உள்ளது. புதுச்சேரி செல்வதற்கு கம்பியம்பேட்டையில் இருந்து வரும் வாகனங்கள் நெல்லிக்குப்பம் சாலையில் இடதுபுறம் திரும்பி உடனே வலது புறம் குண்டுசாலையில் திரும்பி செல்கின்றன. இதேபோன்று மற்ற மார்க்கமாக வரும் வாகனங்கள் தாங்கள் செல்ல வேணடிய சாலையில் திரும்புவதற்கு சிக்கலை எதிர்கொள்ளும் நிலையே நீடிக்கிறது.

we-r-hiring

இதனால் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இப்பகுதியில் போக்குவரத்து சிக்னல், போலீஸ் பூத் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து காவலர்கள் பணியமர்த்தப்பட்டு வாகனங்கள் தடையின்றி பயணம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் போக்குவரத்து நெரிசல் தீர்ந்தபாடில்லை. போக்குவரத்து காவலர்கள் இல்லாத நேரத்தில் வாகனங்கள் தாறுமாறாகவும், போக்குவரத்து விதிகளை மீறியும் செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. இந்த பகுதியில் மேம்பாலம் அமைத்தால் மட்டுமே போக்குவரத்து சிரமமின்றி நடைபெறும் என பொதுமக்கள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து குடியிருப்போர் நலச்சங்க சிறப்பு தலைவர் மருதவாணன் கூறுகையில், செம்மண்டலம் சந்திப்பில், கடலூர் – நெல்லிக்குப்பம், கடலூர் – புதுச்சேரி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் ஒன்றையொன்று குறுக்கிடாதவாறு ரூ.9.5 கோடியில் பல்லடுக்கு மேம்பாலம் கட்ட டிராபிக் கமிட்டி பரிந்துரை செய்தது. இருப்பினும் கம்பியம்பேட்டை சாலை நுழைவு பகுதி குறுகலாக உள்ளது என நெடுஞ்சாலைத்துறை அறிக்கை சமர்ப்பித்தது.

இதனால் இத்திட்டம் செயல்வடிவம் பெறவில்லை. மேலும், செம்மண்டலம் பகுதியில் ரவுண்டானா அமைக்க ஆட்சியர், எஸ்பி ஆகியோர் 2 முறை ஆய்வு நடத்தியுள்ளனர். காலை நேரங்களில் 6 முனைகளில் இருந்தும் வரும் அதிகப்படியான வாகனங்கள் தடையின்றி செல்ல முடியாமல் நெரிசலில் சிக்கிக்கொள்கின்றன. எனவே, நெரிசலை குறைக்கவும், விபத்தை தவிர்க்கவும் இப்பகுதியில் பல்லடுக்கு மேம்பாலம் அமைப்பது மிகவும் அவசிய தேவையாக உள்ளது, என்றார்.

மாநகராட்சி 2வது வார்டு கவுன்சிலர் கீதா குணசேகரன் கூறுகையில், செம்மண்டலம் சந்திப்பில் மேம்பாலம் அமைக்க பல வருடமாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. மேம்பால பணிகள் முழுமையடையும் நிலையில் கடலூர் மாவட்ட தலைநகர் மற்றும் முக்கிய நகரமாக உள்ள நிலையில், இந்த வழித்தடத்தில் பயணிக்கும் பொதுமக்களுக்கு போக்குவரத்து பாதிப்பு இல்லாத வகையில் அமைவதோடு, மாநகரில் பல்வேறு பிரிவு மக்களுக்கும், மாணவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும், என்றார்.

செங்கோட்டையன் கையில் அதிமுக தலைமை! ரகசியத்தை உடைக்கும் உமாபதி!

MUST READ