அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியை ஓரங்கட்டிவிட்டு, செங்கோட்டையனை பொதுச்செயலாளர் ஆக்க பாஜக காய் நகர்த்தி வருகிறது. அவர் தலைமையில் ஒருங்கிணைந்த அதிமுக உடன் பாஜக கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.


செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பின் அடுத்தக்கட்டமாக என்ன நடக்கும்? என்பது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியுப் சேனலுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:- எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அதிமுகவில் இருக்கக்கூடிய ஒரு மூத்த தலைவர் செங்கோட்டையன். அவரை பார்த்து ஆசைப்பட்டுதான் எடப்பாடி பழனிசாமி போன்றவர்கள் அரசியலுக்கே வந்தனர். ஆர்.எம்.வீரப்பன்தான், செங்கோட்டையனை எம்ஜிஆரிடம் அழைத்துச் சென்றவர். 1975ஆம் ஆண்டு கோவையில் ஒரு மிகப்பெரிய மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டிற்கு முன்னதாக 25 வயது இளைஞரான செங்கோட்டையன் சிறப்பாக களப்பணி ஆற்றுவதை, ஆர்.எம்.வீரப்பன் அடையாளம் காண்கிறார். கோபிசெட்டிப்பாளையத்தில் ஆர்.எம்.வீரப்பனுக்கு, அந்த காலத்திலேயே 100 புல்லட்டுகளுடன் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தார். அந்த காலத்தில் பணக்காரர்களிடம் மட்டுமே புல்லட் வாகனம் இருந்த நிலையில், செங்கோட்டையன் பிரம்மாண்ட பேரணியை நடத்தினார்.

இந்நிகழ்வின் மூலம் இளைஞராக இருந்தபோதும் செங்கோட்டையனுக்கு, கட்சியினரை ஒருங்கிணைக்கும் திறமை உள்ளது என்பதை ஆர்.வீரப்பன் கண்டறிகிறார். அந்த நம்பிக்கையில் கோவையில் எம்.ஜி.ஆர் பங்கேற்க உள்ள அதிமுக மாநாட்டின் பொருளாளராக செங்கோட்டையனை நியமித்தார். கோவையில் உள்ள கோவை செழியன் ஒரு மலையாளி. அவரை வைத்து கொங்கு வேளாளர் சமூகத்தினரை திரட்ட முடியாது என்பதால், கோபிச்செட்டிப்பாளையத்தில் இருந்து செங்கோட்டையனை இறக்கினார்கள். அதேபோல், அவர் கூட்டத்தை மிக பிரம்மாண்டமாக செங்கோட்டையன் நடத்திக்காட்டினார். அதற்கு பிறகு செங்கோட்டையனுக்கு ஏறுமுகம். எம்.ஜி.ஆர் காலத்திலேயே எம்எல்ஏ ஆக இருந்தார். ஜெயலலிதா வருகைக்கு பின்னர், ஆர்.எம்.வீரப்பன் ஜானகி அணிக்கு சென்று விட்டார். ஆனால், ஜெயலலிதாவுக்கு முழுக்க முழுக்க ஆதரவாக இருந்தார் செங்கோட்டையன். திருநாவுக்கரசர், கண்ணப்பன், சேலம் கண்ணன் போன்றவர்கள், ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளர்களாக இருந்தனர். ஆனால் ஜெயலலிதா, அவர்களுடைய கட்டுப்பாட்டிற்குள் செல்லாமல் தனித்து இருக்க விரும்பினார். அப்போது, ஜெயலலிதாவுக்கு பக்க பலமாக இருந்தவர் செங்கோட்டையன். அவர்தான் ஜெயலலிதாவின் சுற்றுபயண திட்டம், பிரச்சார திட்டம் போன்றவற்றை வடிவமைத்து கொடுத்தவர்.

1991 சட்டமன்றத் தேர்தலில் முழுக்க முழுக்க ஜெயலலிதாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் செங்கோட்டையன். ஜெயலலிதாவின் பிரச்சார பயணத்தை முழுமையாக செங்கோட்டையன் திட்டமிட்டு கொடுத்தார். அதை இளம் பத்திரிகையாளராக நாங்கள் பணிக்கு சேர்ந்தபோது நேராக பார்த்திருக்கிறோம். இந்நிலையில், செங்கோட்டையன் இந்த நேரத்தில் எதற்காக உள்ளுக்குள் வருகிறார் என்கிற சந்தேகம் ஏற்படும். அதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி அதிமுகவை ஒரு சாதி கட்சியாக மாற்றிவிட்டார். அதனால் தென் மாவட்டங்களில் இருக்கிற பல சாதியினர் அதிமுகவை விட்டு மெல்ல மெல்ல விலக தொடங்கிவிட்டனர். ஓபிஎஸ் உடன் ஒரு கூட்டம் செல்கிறது. டிடிவி தினகரனுடன் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் சென்றுவிட்டனர். சசிகலாவை வேறு அதிமுகவில் இருந்து ஒதுக்கிவைத்துவிட்டனர். ஜெயலலிதா இல்லாத நிலையில், அதிமுக பலவீனமடைந்து கொண்டே வருகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு பெயர் கெட்டுப்போகிறது.

இப்படியான சூழலில்தான் பாஜக காய்நகர்த்தி, செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவரை உள்ளே கொண்டு வருகிறார்கள். அவர் கவுண்டராகவும் இருப்பார். கொங்கு மண்டலத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அறிமுகமானவர் செங்கோட்டையன் என்பதால், அவரை தலைமை பொறுப்புக்கு கொண்டுவந்தால், தென் மாவட்டத்தை சேர்ந்தவர்களும் அவரை ஏற்றுக்கொள்வார்கள். ஒருங்கிணைந்த அதிமுகவின் முழு வாக்குகளையும் பெற வேண்டும் என்பதுதான் பாஜகவின் திட்டமாகும். ஜெயலலிதா அண்ணா, பெரியார் கொள்கைகளையும், ஆன்மீகத்தையும் சமமாக மதித்து நடந்தார். அதுதான் அவர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு காரணம். ஆனால் இதை தற்போதைய தலைமை பெற தவறிவிட்டது. எனவே அனைவரும் ஒருங்கிணைந்து தேர்தலை சந்தித்தால் தான் அதிமுக வெற்றி பெற முடியும் என்பது அவருடைய விருப்பமாகும். அதன் பின்னணியில் செங்கோட்டையன், அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகப் போகிறார். இதற்காக தான் அமித்ஷா, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக சொல்லவில்லை. வெறும் அதிமுக தலைமையில் ஆட்சி என்று சொல்லி வருகிறார்.

தற்போது, செங்கோட்டையனை உள்ளே கொண்டுவந்து எப்படியாவது பொதுச்செயலாளர் ஆக்கி விடுவார்கள். செங்கோட்டையன் தலைமையில் கட்சியில் இருந்து வெளியேறிய ஓபிஎஸ், சசிகலா போன்றவர்களை உள்ளே அழைத்து, அவர்களுடன் பாஜக கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க திட்டமிடுகிறார்கள். இதுதான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எடப்பாடியாரின் நிலை என்பது முடிந்துவிட்டது. செங்கோட்டையனை ஏன் எல்லோரும் ஆதரிப்பார்கள் என்றால்? அவருடைய மகனையும் அரசியலில் இறக்கிவிட்டார். அவர் பல்வேறு இடங்களில் சீட்டு வாங்கித் தருவதாக கூறி கோடிக் கணக்கில் பணம் வசூலித்து வருகிறார். இது கட்சியின் மூத்த தலைவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே எடப்பாடியை கட்சியில் இருந்து ஓரங்கட்டப் போகிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு கூடியது பணம் கொடுத்து கூட்டிய கூட்டமாகும். இதனால்தான் எடப்பாடி என்கிற பெயரையே அமித்ஷா சொல்லவில்லை.


