ஆவடி மாநகராட்சி எல்லையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இயங்கவில்லை என்றும், பேரிடர் காலத்தில் மழைநீர் வெளியேற்றும் மோட்டார்கள் மொத்தமாக பழுதடைந்து இருப்பதாகவும் அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் நடந்த கூட்டத்தில் மண்டல தலைவர்கள் அம்பலப்படுத்தி உள்ளனர்.
ஆவடி மாநகராட்சியில் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தலைமையில் பேரிடர் மேலாண்மை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் மாவட்ட ஆட்சியர் பிரதாப், ஆவடி காவல்துறை துணை ஆணையர், மாநகராட்சி ஆணையர் சரண்யா, மேயர் உதயக்குமார், நான்கு மண்டல தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.
வங்கக் கடலில் தமிழக கடலோரப் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. அதனால் தமிழகத்தில் கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதனால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர்களுக்கு முதலமைச்சர் உத்தரவுகளை வழங்கியுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக ஆவடி மாநகராட்சியில் அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், ஏரிகளை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து ஆவடி மாநகராட்சியில் தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்றுவதற்கு எத்தனை மோட்டார்கள் உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கேட்டார். அதற்கு ஆணையர் சரண்யா பதில் சொல்ல தெரியாமல் முழித்தார். மேயருக்கும் எதுவும் தெரியவில்லை. அப்போது எல்லாம் சரியாக இருக்கிறது என்று சம்பந்தம் இல்லாமல் பொறியாளர் ரவிச்சந்திரன் சமாளித்தார்.
ஆவடி மாநகராட்சியில் மேயராகவும், ஆணையராகவும் பணியாற்றி வருபவா்களுக்கு அந்த மாநகராட்சியில் மழைநீரை வெளியேற்றும் மோட்டார் இயந்திரங்கள் எத்தனை இருக்கிறது என்று தெரியாமல் இருப்பது தான் வேதனையின் உச்சம். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கேள்வி மேல் கேள்வி எழுப்பும் போது சுமார் 15-க்கும் மேற்பட்ட மோட்டார்கள் பழுதடைந்து இருப்பதாக பொறியாளர் ரவிச்சந்திரன் மழுப்பலாக பதிலளித்தாா். அதைக்கேட்டு அமைச்சர் நாசா், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இயங்கவில்லை என்று மண்டல தலைவர்கள் வரிசையாக புகார் தெரிவித்தனர். என்னது… கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களும் இயங்கவில்லையா? என்று மாவட்ட ஆட்சியர் அதிர்ச்சியுடன் கேட்டார். 42 வது வார்டில் உள்ள பம்புஹவுஸ் இயங்கவில்லை என்று மண்டல தலைவர் ராஜேந்திரன் புகார் தெரிவித்தார். பம்புஹவுஸ் செயல்படாததால் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து மக்களை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கி வருகிறது என்று மண்டலத் தலைவர்கள் ஒவ்வொருவரும் வேதனையுடன் தெரிவித்தனர். அதைக்கேட்டு அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் பிரதாப் உள்ளிட்ட அதிகாரிகள் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அடைந்தனர்.
மக்களுக்கு பாதிப்பு என்றால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலரிடமும், மண்டல தலைவர்களிடமும், மேயரிடமும் புகார் கூறுவார்கள். அதன் மீது நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியும் அளிப்பார்கள். ஆனால் ஆவடி மாநகராட்சியில் புகார் கொடுக்கின்ற இடத்தில் மேயரும், மண்டலத் தலைவர்களும் இருக்கிறார்கள். அதை காதுகொடுத்து கேட்க்காமல் அலட்சியமாக கடந்து செல்கின்ற இடத்தில் ஆணையர் சரண்யா இருக்கிறார் என்பது தான் உள்ளாட்சி நிா்வாகத்தில் முக்கியமான செய்தியாக இருக்கிறது.


