ஹைதராபாத்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நடந்த பேருந்து விபத்து ஆந்திர மாநிலத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கர்னூல் மாவட்டம் சின்ன தேகூரு அருகே ஏற்பட்ட இந்த விபத்தில் 20 பேர் தீக்கிரையாகி உயிரிழந்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து நேற்றிரவு 10.30 மணிக்கு, “வி காவேரி” எனும் தனியார் சொகுசு பேருந்து 41 பயணிகளை ஏற்றி பெங்களூரு நோக்கி பயணித்தது. இன்று அதிகாலை 3 மணியளவில் கர்னூல் மாவட்டம் 44-வது தேசிய நெடுஞ்சாலையில், பேருந்து முன்னால் சென்ற பைக்கில் மோதியது. இதில், பைக்கில் இருந்தவர் தூக்கி எறியப்பட்டுள்ளார். ஆனால், பேருந்தின் அடியில் அந்த பைக் சிக்கி கொண்டது. பேருந்தின் ஓட்டுநர் இதனை கவனிக்காமல் பேருந்தை சுமார் 350 மீட்டர் வரை ஓட்டி சென்றுள்ளாா். இதில் பைக்கில் இருந்த பெட்ரோல் டேங்க் வெடித்ததில் பேருந்தில் தீப்பற்றி, மளமளவென பேருந்து முழுவதும் தீ பரவியுள்ளது.

அதிகாலை நேரம் என்பதால் அந்த நேரத்தில் பெரும்பாலான பயணிகள் தூங்கிக் கொண்டிருந்தனர். கீழ் வரிசை படுக்கைகளில் இருந்த சிலர் மட்டுமே உடனே வெளியேறி உயிர் தப்பினர். ஆனால் மேல் படுக்கையில் தூங்கியிருந்தவர்கள் எழுந்து இறங்குவதற்குள் தீ மற்றும் புகையால் சிக்கி உயிரிழந்தனர். தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் கர்னூல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்ததும் கர்னூல் போலீஸார், தீயணைப்பு படையினர், ஆம்புலன்ஸ் வந்தது. அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்து சாலையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தவர்களை ஆம்புலன்ஸில் கர்னூல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
விபத்து குறித்து கர்னூல் மாவட்ட ஆட்சியர் ஏ. சிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது, “பேருந்தில் மொத்தம் 41 பேர் பயணித்தனர். இதில் 21 பேர் பாதுகாப்பாக உயிர் தப்பியுள்ளனர். சீட்டில் இருந்தபடியே பலர் உயிருடன் எரிந்து இறந்துள்ளனர். ஆதலால் எலும்பு கூடுகளாக இருக்கும் இவர்கள் யார் யார் என்பது குறித்து டி.என்.ஏ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இறந்தவர்கள் சிலரின் உடல்களுக்கு பிரேத பரிசோதனைக்குப் பின் அவரவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. விபத்துக்குப் பிறகு பேருந்தின் கதவுகள் திறக்கப்படவில்லை என்றும், இந்த விபத்தானது இன்று அதிகாலை 3 மணி முதல் 3.10 மணி இடையில் நிகழ்ந்தது,” என தெரிவித்தார்.
விபத்து குறித்துப் பேசிய தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர், “பேருந்தில் அவசரநிலை சுத்தியல்கள் அல்லது தப்பிக்க கருவிகள் இல்லை. பைக் மோதிய பிறகு ஓட்டுநர் வண்டியை நிறுத்தவில்லை. டீசல் டேங்க் வெடிக்காதபோதும் பேருந்து முழுமையாக எரிந்தது,” என தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து கர்னூல் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விபத்தின் காரணம் மற்றும் ஓட்டுநரின் அலட்சியத்தை குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
விபத்து குறித்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஆழ்ந்த வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த பேருந்து தீ விபத்தில் பலர் உயிரிழந்தது மிகுந்த துயரம் அளிக்கிறது. குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என தெரிவித்துள்ளாா்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் பலர் உயிரிழந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தர்கள் விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன். இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மற்றும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ரேவந்த் ரெட்டி, “நிவாரண பணிகளை ஒருங்கிணைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,” என தெரிவித்துள்ளார்.
‘கட்டா குஸ்தி 2’ ரிலீஸ் எப்போது?…. விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட்!


