2005-ல் என்.டி.ஏ கூட்டணிக்கு வாக்களித்ததற்காக பீகார் மக்களை பழிவாங்கிய கட்சிகள் காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி என்று கூறிய பிரதமர் மோடி பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
பீகார் மாநில சட்டபேரவை தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 6-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் அந்த மாநிலத்தில் தேர்தல் பரப்புரையை தொடங்கினார். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சமஸ்திபூரில் இருந்து தேர்தல் பரப்புரை கூட்டத்தை தொடங்கியுள்ள பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான ஆட்சி பீகார் மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவித்ததோடு, அப்போது பீகார் புதிய பாதையில் ஓடத் தொடங்கும் எனவும் தெரிவித்தார்.
பீகார் மாநிலத்தில் ஜனநாயகத்தின் மாபெரும் திருவிழாவிற்கான ஒலி எழுப்பப்பட்டு விட்டது. இப்போது பீகார் முழுவதும் “மீண்டும் ஒருமுறை தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம்” எனும் கோஷம் ஒலிப்பதை கேட்க முடிவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர்களை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள மோசடிகளில் சிக்கி ஜாமீனில் அக்கட்சியின் தலைவர்கள் வெளியே உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இந்த முறை பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பீகார் மாநில முந்தைய சட்டமன்ற தேர்தல்களின் சாதனைகளை முறியடிக்கும் என கூறியதோடு, வரலாற்று சிறப்புமிக்க மிகப்பெரிய வெற்றியை பீகார் மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பெறும் என கூறினார். 2005 ஆம் ஆண்டு பீகார் மாநிலத்தில் நிதீஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்த போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்த ராஷ்டிய ஜனதா தளம், பீகாரின் வளர்ச்சி பாதைகளில் தடையை ஏற்படுத்தியதாகவும் , நிதீஷ் குமார் தலைமையிலான கட்சிக்கு வாக்களித்ததற்காக பீகார் மக்களை மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் பழிவாங்கியதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். இதற்கெல்லாம் காரணமாக ராஷ்டிரிய ஜனதா தளம் பின்புலத்தில் செயல்பட்டதாகவும், தாங்கள் சொல்வதைக் கேட்கவில்லை என்றால் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வழங்கியுள்ள ஆதரவை திரும்ப பெற்று விடுவோம் என மிரட்டியே பீகார் மாநிலத்தை ராஷ்டிரிய ஜனதா தளம் பழி வாங்கியதாகவும் பிரதமர் மோடி கடுமையாக குற்றம் சாட்டினார்.
எனவே பீகார் மக்கள் எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்க வேண்டிய காலம் இது என தெரிவித்ததோடு, ‘ஜங்கிள் ராஜ்யத்தை’ தோற்கடிக்க இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணிக்கே மீண்டும் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
பெருமழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயார் – அமைச்சர் கே.என்.நேரு..!!


