பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான 71 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது பாரதிய ஜனதா கட்சி.243 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட பீகார் மாநிலத்திற்கு நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. 121 சட்டமன்ற தொகுதிகளுக்கான முதற்கட்ட தேர்தலில் போட்டியிட வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வழங்கிய கால அவகாசம் வரும் 15ம் தேதியுடன் நிறைவடையவுள்ளது.
இச்சூழலில் பாரதிய ஜனதா கட்சி தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் தலைமை வகிக்கும் பாஜக நடப்பு சட்டமன்றத் தேர்தலில் 101 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் முதற்கட்டமாக 71 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. மீதமுள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அடுத்த ஓரிரு தினங்களில் வெளியிட கூடும் என்றும், மத்திய தேர்தல் குழு கூட்டம் மீதமுள்ள வேட்பாளர்களின் பெயர்களை விரைவில் இறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பீகார் மாநிலத்தின் தற்போது துணை முதலமைச்சராக உள்ள சாம்ராட் சவுத்ரி தாராப்பூர் சட்டமன்ற தொகுதியிலும், மற்றொரு துணை முதலமைச்சரான விஜயகுமார் சின்கா லக்கிசாராய் சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என பாஜக வேட்பாளர் பட்டியலில் அறிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், காங்கிரஸ் – ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணியான ‘மகா கத்பந்தன்’ இன்னும் தொகுதி பங்கிட்ட இறுதி செய்யவில்லை என்பது இந்நேரத்தில் குறிப்பிடத்தக்கது.