கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கோழி இறைச்சி வெட்டும் தொழிற்சாலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், போராட்டக்காரர்கள் திடீரென்று தொழிற்சாலைக்குள் புகுந்து தீ வைத்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு கோழி இறைச்சியை வெட்டி தரக்கூடிய ஒரு தொழிற்சாலை நிறுவப்பட்டிருந்தது. இந்த தொழிற்சாலையினால் அந்த பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும், உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் கடந்த சில ஆண்டுகளாகவே எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இந்தாண்டு பஞ்சாயத்து சார்பில் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், தொழிற்சாலை தொடர்ந்து இயங்கி வருவதை எதிர்த்து, மக்கள் தொடர் போராட்டம் நடத்துவதற்காக தொழிற்சாலை முன்பாக கூடியிருந்தனர். அச்சமயம் மக்கள் தொழிற்சாலைக்கு தீ வைத்ததாகவும் அதை தடுக்க முற்பட்ட காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இதை தொடர்ந்து தடியடி சம்பவம் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் காவல்துறையினரும், பொதுமக்களும் எதிர்தரப்பினருமே காயம் அடைந்திருக்கிறார்கள். இந்த நிலையில், தான் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்க வந்த வாகனத்தையும் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 300-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பித்தக்கது.


