தன் மீதான பதவிநீக்க தீர்மான நோட்டீஸ் மீது விசாரணை நடத்த மக்களவை சபாநாயகர் அமைத்த குழுவுக்கு தடை கோரி டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.


டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் எரிந்த நிலையில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் பதவிநீக்க தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, யஷ்வந்த் வர்மா மீதான புகார் குறித்து விசாரிக்க மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா குழு ஒன்றை அமைத்திருந்தார். அந்த குழுவுக்கு தடை விதிக்கக் கோரி நீதிபதி யஷ்வந்த் வர்மா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி யஷ்வந்த் வர்மா தரப்பில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் பதவி நீக்க தீர்மான நோட்டீஸ் ஏற்கப்படவில்லை என்றும், இரு அவைகளுக்குமான கூட்டுக்குழு அமைக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. எனினும் அவரது தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், மக்களவை சபாநாயகர் அமைத்த குழுவுக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


