கரூர் சம்பவத்தில் இருந்து மீண்டுவரத் தெரியாத தவெக, இந்த நாட்டிற்கு எப்படி வழிகாட்டுகிற இடத்திற்கு வரும் என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.


கரூர் சம்பவத்தை அடுத்து தவெகவை அடிப்படையாக வைத்து நடைபெறும் கூட்டணி கணக்குகள் குறித்து அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- காங்கிரஸ்-க்கு அதிக இடங்களை தர வேண்டும். இல்லா விட்டால் அரவிந்த் கெஜ்ரிவாலை போன்று ஒரு முடிவை எடுக்க வேண்டி வரும் என்று மாணிக் தாகூர் எம்.பி. கூறியுள்ளார். காங்கிரசை பலப்படுத்தி வைத்திருப்பதாக சொல்கிற மாணிக் தாகூர், விருதுநகர் தொகுதியில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறுவாரா? விஜய பிரபாகரனிடமே மிகவும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தான் அவர் வெற்றி பெற்றார். தங்களின் இருப்பை காட்டிக் கொள்வதற்காக மாணிக் தாகூர், ராஜேஷ்குமார், கே.எஸ்.அழகிரி போன்றவர்கள் இப்படி பேசி வருகின்றனர். கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலுக்கு, விஜயை அழைத்து வந்தால் கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்களின் வாக்குகளை வாங்கலாம் என நினைக்கிறார். கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திற்கு முன்பு விஜய் முதலமைச்சர் ஆவார் என்று எதிர்பார்த்தார்கள். அந்த சம்பவத்திற்கு பிறகு, ஒரு அடி எடுத்து வைக்க முடியவில்லை. கேரவனில் ஒய் பிரிவு பாதுகாப்புடன் வந்து நின்றுகொண்டு எழுதி கொடுத்ததை படித்தால், நீங்கள் இந்த நாட்டின் முதலமைச்சர் ஆகி விடுவீர்களா?

ஜெயலலிதா போல ஹெலிகாப்டரில் பிரச்சாரம் செய்ய போவதாக விஜய் சொல்கிறார்கள். ஜெயலலிதாவும், அவரும் ஒன்றா? ஜெயலலிதா என்பவர் துணிச்சலுக்கு அடையாளமாவார். சங்கராச்சாரியாரை தூக்கி ஜெயிலில் போட்ட அவரும், பிறரின் முதுகுக்கு பின்னால் ஒளிந்துகொள்ளும் விஜயும் ஒன்றா? சிபிஐ விசாரணைக்கு போனதன் மூலம் விஜய், தாமகவே சென்று பாஜகவின் வலையில் சிக்கிக் கொண்டார். காங்கிரஸ் நிர்வாகிகள் விஜயை புகழ்ந்து பேசவும், அவருடன் கூட்டணிக்கு சென்றால் என்ன தவறு என்றும் கேட்கிறார்கள். அப்படி கேட்டால் தான் 10 இடங்களை திமுக அதிகமாக தரும். எனவே அப்படி செய்கிறார்கள். காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டு ஆட்சியை பிடித்தால் எல்லோரும் வரவேற்போம். ஆனால், திமுக – அதிமுக என்கிற 2 திராவிட கட்சிகளின் தோள் மீது ஏறிக்கொண்டு எதற்காக சவலைப் பிள்ளை போன்று அரசியல் செய்கிறீர்கள். அரசியலில் எந்த போராட்டங்களோ, கூட்டங்களோ நடத்தாமல் நேரடியாக முதலமைச்சர் ஆக யாராலும் முடியாது.

விஜயை, பாஜக, அதிமுக என அனைத்துக் கட்சிகளும் கூட்டணிக்கு அழைக்கிறார்கள். அவர் கூட்டணிக்கு சென்றால் காணாமல் போய்விடுவார். விஜயகாந்த், அதிமுக கூட்டணிக்கு சென்று எதிர்க்கட்சி தலைவராகினார். அடுத்து அவர் முதலமைச்சராகி இருக்க வேண்டும். ஆனால் மக்கள் நலக் கூட்டணியில் சென்று எம்.எல்.ஏ கூட ஆக முடியாமல் நின்றார். தொடர்ந்து ஒருவருக்கு இமேஜ் பயன்படும் என்றால் எதற்காக சிரஞ்சீவி கட்சியை காங்கிரசுக்குள் கொண்டுபோய் சேர்க்கிறார்? சரத்குமார் எதற்காக பாஜக உடன் கட்சியை இணைத்தார்?. இமேஜ் என்பது ஒரு காலகட்டம் வரைதான். அதற்கு மேல் பயன்படாது. விஜய் என்கிற பட்டம் எவ்வளவு தூரம் பறந்தாலும், அதை ஆட்டிவிக்கும் கயிறு தற்போது பாஜகவின் கைகளில் இருக்கிறது. அதிமுகவினர் தாங்கள் வேண்டுமானாலும் நூலை பிடித்து ஆட்டுவதாக சொல்கிறார்கள். நடிகை விந்தியாவுக்கு வயதாகிவிட்டது. எனவே விஜயை அந்த இடத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அதிமுக நினைக்கிறது. விந்தியாவின் இடத்திற்கு விஜய் வரப்போகிறாரா? என்பதுதான் கேள்வி.

தமிழ்நாட்டில் ஸ்டாலினை தவிர்த்துவிட்டு மக்களுக்கு நன்மை செய்யும் ஒரு தலைவரை குறிப்பிட்டு சொல்ல முடியுமா? எடப்பாடி பழனிசாமியின் 4.5 ஆண்டு கால ஆட்சி என்பது அதிமுகவுக்கு அடிமை சேவகம் செய்ததாகும். அது மீண்டும் வேண்டும் என்று மக்கள் விரும்பவில்லை. விஜயால் ஒரு கூட்டத்தையே நடத்த முடியவில்லை. அவர் எப்படி கட்சி நடத்துவார்? கருர் சம்பவம் நடைபெற்று இத்தனை நாட்கள் ஆகியும் அவர் வெளியே வரவில்லை. தமிழ்நாட்டில் 6.5 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 50 லட்சம் பேர் விஜய்க்கு ஆதரவாக இருந்தாலும் மற்றவர்கள் அவருக்கு எதிராக தான் வாக்களிப்பாளர்கள். அரசியல் அனுபவம் உள்ள எவரும் விஜய்க்கு வாக்களிக்க மாட்டார்கள். விஜய் திரையில் தான் ஹீரோ. தரையில் ஜீரோ. அவரால் அரசியல் ஒரு நாளும் செய்ய முடியாது என்பதை அவரே நிரூபித்துவிட்டார். இதுவரை விஜய் என்ன களப்பணி ஆற்றியுள்ளார். அவருடைய கட்சியினரையே அவர் முழுமையாக சந்திக்கவில்லையே. அரசியலில் ஒற்றை முகத்தை காண்பித்து எப்படி வெற்றி பெற முடியும்?

ராஜிவ்காந்தி மரணத்தின்போது திமுக மீது பழிபோடப்பட்டது. ஈழ விவகாரத்தில் திமுகவின் அணுகுமுறை காரணமாக அதை மக்கள் நம்பினார்கள். இன்றைக்கு கரூரில் நடைபெற்றது ஒரு விபத்து ஆகும். இதற்கு சாட்சியாக 27 ஆயிரம் பேர் உள்ளனர். அங்கே சதி செயல் நடந்தால், ஒரு சாட்சியை காட்டுங்கள். ஆனால் கூட்டநெரிசலை எப்படி நீங்கள் அரசின் மீதான பழியாக காட்ட முடியும்? விஜய் அரசியல் வெல்லாது என்பதற்கு கரூர் ஒரு சாட்சியாகும். அவரால் இதை தாண்டி வரவே முடியாது. இந்த குற்றச்செயலில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்வதற்கு வழி தெரியாதவர்கள். இந்த தேசத்திற்கு என்ன வழி காட்ட போகிறார்கள்? அவர்களால் வாக்கு சதவீதத்தையும் நிரூபிக்க முடியாது. விஜயிடம் உள்ள இளைஞர்களை பயன்படுடுத்திக் கொள்ள அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் திட்டம் வைத்திருக்கிறார்கள். அதேபோல் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரசும் ஒரு திட்டம் வைத்துள்ளனர். எல்லோருக்கும் தங்களுடைய பல்லக்கை தூக்க பத்து நபர் வேண்டும். நீங்கள் வருகிறீர்களா? என கேட்கிறார்கள். அப்படிபட்ட இடத்தில் ஒரு இயங்காத செயல்படாத கட்சியை விஜய் வைத்துக்கொண்டிருக்கிறார். அவர்களால் கரை சேர முடியாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.


